துளிதுளியாய்ச் சிதறும்
பரவசங்களை
நனைந்த என்
குட்டைப் பாவாடை முழுக்க
அள்ளிச் சேமிக்கிறேன்
ஒவ்வொன்றாய்ச் சிதறாமல்
பூமியின் முலைகளில்
ஊற்றெடுத்து வழியும்
வெண்மையின் பாலில்
என் பாவங்களை
கழுவித் துவைத்து உலர விடுகிறேன்.
ஓடிக்கொண்டே இருக்கும்
என் உற்சாக நதியில்
பானங்களை அள்ளிப் பருகுகிறேன்.
தரிசாகக் கிடக்கும்
மனவெளியில்
விதைகளை விதைத்து
மழையைப் பெய்விக்கிறான்
பசுமையின் சொந்தக்காரன்.
ஓர் அழகிய இசை
ஆடைகளைக் களைந்துவிட்டு
கை, கால்கள் முளைத்து
நடனமிட்டு ஓடுகிறது
நிர்வாணமாய்.
பரந்த வெளியின் பறவைகள்
தங்கள் காதலனின் பெயரை
உரக்கக் கத்தியபடி
பாடி விரைகின்றன.
மொத்தமாய்ச் சேர்த்த
கனவுகள் வெடித்து
பூமியெங்கும் சிதறட்டும் இன்று.
இது நதியின் நாள்
இது அருவியின் நாள்
இது வனாந்தரத்தின் நாள்
இது எனது நாள்
----பெண்ணியா (இலங்கை)
No comments:
Post a Comment