
வேலை முடிந்த நாளொன்றின்
களைத்துப் போன
புறநகர் ரயில் பயணமொன்றில்
விழிப்பிற்கும் உறக்கத்திற்கும்
இடையேயான கனவொன்றிலிருந்து
பலவந்தமாய் மீள வேண்டியிருந்தது
தொங்குங் கம்பியைத்
தொலைத்து விடாமலிருக்க ..
தூக்கம் துரத்த
ஏதாவது யோசித்திருக்க
சிக்கினார்
அன்றும் கடவுள் கைகளிலே ..
எத்தனை வேலைக ளவருக்கு
சொந்தத் தொழிலா
சம்பளமுண்டா
உயரதிகாரிக்கு பயப்படுவாரா
தான் வருமுன்னே
வந்துவிடக் கூடாதவரென
வேண்டியதுண்டா
விடுப்புக்கு விண்ணப்பிப்பாரா
பயணத்திற்கு மூன்று மாதம் முன்பே
பதிந்து வைப்பாரா
ஊதிய உயர்விற்கு
சண்டை போடுவாரா
பதில் தெரியாத
தொடர் கேள்விகளின் முடிவில்
அவர் ஒருவர் தானா
இல்லையெனில் எங்கிருக்கிறது
கடவுள்களின் அலுவலகம்
புதிய கேள்விகள்
நிறுத்தத்தில் நின்றன .
ஒரு நாளின்
எட்டு மணி நேரம் மட்டுமே
நான் செய்யும்
கூட்டல் கழித்தலிற்கே
சுளுக்கிக் கொள்ள
பல நூறாண்டுகள் தாண்டியும்
படைத்துச் சலிக்க
ஒருவரல்ல கடவுள்
பெயர்களெழுத
பயணச் சீட்டின்
பின்பக்கமாவது தாண்டும்
எனக்குத் தெரிந்த
கடவுளர்களின் பெயர் பற்றி
யோசித்துக் கொண்டே
நிலையம் தாண்டும்
மந்தையினூடே ஊர்கையில்
சாலையோரம் படுத்த படி
பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்
பெயர் சொல்ல விரும்பாத
ஒரு கடவுள்
--Rejovasan
Rejovasan.com
No comments:
Post a Comment