இந்த வினாடியின் கடைசிப் புள்ளியிலிருந்து
வெளியேறிவிடத் துடிக்கறான் அவன்
பெரு நகரமொன்றில் அவன் மூச்சுக்காற்று
படர்ந்த அம்முதல் கணம் அசுத்தம்
மேலும் பரவும் பேரபாயத்தை உணர்ந்தவர்கள்
முதலில் அவனை எச்சரித்தார்கள்.
காலி மதுப்புட்டிகளின் இறுதித்துளிகளைச்
சுவைத்து உறிஞ்சும் அச்சிறுவனையே
முதலில் அவன் கண்ணுற நேர்ந்தது.
அவன் போதையில் கொறித்த மிச்சத்தை
யாருமறியாமல் பொட்டலமாக்கிக் கொண்ட
நாகரிக இளைஞனின் பசியை
இடைவிடாமல் கிசுகிசுக்கும்
மெல்லிய இசை பரவுகிறது காற்றில் நஞ்சாய்.
நாகரிக யுவதியின் இடை தழுவி
அவன் நடனமாடும் நள்ளிரவில்
வலுவில் அடக்கிக் கொள்கிறான்
எளிதில் ஜீரணிக்காத யாவற்றையும்
விடியற்காலை தன் ஆடைகளைத் தளர்த்து
பெருமூச்சுவிடுகிறது.
இறுதியாய் அவன் அந்த நகரின்
சமாதிக்கு இறுதிக் கல்லாகிறான்.
--புன்னகை.க.அம்சப்ரியா
No comments:
Post a Comment