
இம்மழை நாட்களில்
உன்னிடம் பேசுவதற்கென்று
ஏதுமிருப்பதில்லை
எங்கு சென்றாலும்
பின்தொடர்கின்றன
ஈடுசெய்ய முடியாத சில இழப்புகள்
எதையோ நினைவுறுத்தியவாறு
அவற்றை தவிர்த்து
இயல்பாக இருக்க முனைகின்றேன்
பழைய நினைவுகளில் புதைந்து
மெதுவாய் நடக்கையில்
முற்றத்துத் தூணில்
சுயமற்றுச் சாய்ந்துக் கிடக்கையில்
அசைவற்றக் குளத்தில்
தனியேக் கல்லெறிகையில்
நின்று போன மழையை வெறிக்கையில்
மங்கிய மாலையில்
மொட்டை மாடியில் தேனிர் அருந்துகையில்
என எக்கணத்திலும்
வெறுமையை நிறைக்கக்கூடும் இக்காலம்
எனினும் அடுத்து நடப்பவைகளுக்கு
எவர்க்கும் நிட்சயங்களில்லையென
நீட்டுகின்றேன் இப்பொழுதை.
இங்கு
இல்லாமலிருப்பதில்
எவ்விதப் பிரச்சனைகளுமிருப்பதில்லை
இருந்து பின் இல்லாமல் போவதைவிட
- குட்டி செல்வன் (kutty.selvan@live.com)
No comments:
Post a Comment