Sunday, December 13, 2009

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்-- தீபச்செல்வன்


வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருந்த
அம்மாவை அக்கராயனில்
நான் தேடிக்கொண்டிருந்தேன்
ஷெல்களுக்குள்
அம்மா ஐயனார் கோயிலை
விழுந்து கும்பிட்டாள்
ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.

நேற்று நடந்த கடும் சண்டையில்
சிதைந்த கிராமத்தில்
கிடந்தன படைகளின் உடல்கள்
கைப்பற்றப்பட்ட
படைகளின் உடல்களை
கணக்கிட்டு பார்த்தபடி
சிதைந்த உடல்கள்
கிடக்கும் மைதானத்தில்
பதுங்குகுழியிலிருந்து
வெளியில் வந்த
சனங்கள் நிறைகின்றனர்.

பக்கத்து வீட்டில்
போராளியின் மரணத்தில்
எழுகிற அழுகையுடன்
இன்றைக்கு நாலாவது தடவையாக
திடுக்கிட்டு எழும்பிய அம்மா
முறிகண்டி பிள்ளையாரை
கும்பிட்டபடி ஓடுகிறாள்
பூக்களும் மண்ணும்
கைகளில் பெருகுகிறது.

02

போன கிழமை விட்டு வந்த
கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது
குசினிக்குப் பக்கத்தில்
கிடந்த பதுங்குகுழியில்
படைகளின் ஏழு சடலங்கள்
மூடுண்டு கிடந்தன.

போராளிகள் கைப்பற்றிய
ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த
கிளைமோர்களைக் கண்டும்
எறிகனைகளைக்கண்டும்
சனங்கள் பெருமூச்செறிந்தனர்.

போர் வாழ்வை அழித்தபொழுது
கிராமங்கள் போர்க்களமாகின
அக்கராயன்குளம் காடுகளில்
ஒளிந்திருக்கும் படைகளிடம்
நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது

03

அகதிகள் வீடாயிருந்த
ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன
அகதிக்குடியிருப்புகள் நிறைந்த
மணியங்குளம் கிராமம்
எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.

நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது
வெளியில் வந்து விடுகிறேன்
தலைகளில் விழும் எறிகனைகளை
ஏந்தும் பிள்ளைகளை
நினைத்து துடிக்கிற
தாய்மார்கள் வெளியில் நின்றனர்.

செஞ்சிலுவைச்சங்கம்
கொண்டு வந்த போராளியின் உடல்
மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு சிங்களத்தாய்
துடித்தழுகிறாள்
ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்
துடித்தழுகிறாள்
சிதைந்த கிராமங்களில்
பரவிக்கிடந்தன
படைகளின் உடல்கள்
மதவாச்சியை கடந்து
படைகள் வரத்தொடங்கியபொழுது
வவுனியாவைக்கடந்து
போராளிகள் போகத்தொடங்கினர்.

தெருமுறிகண்டி மடங்களில்
கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.

புதுமுறிப்பில் வீழ்ந்த
ஏறிகனைகளில் இறந்த
குழந்தைகள்
வரிச்சீருடைகளை அணிந்த
காட்சிகளை
ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

படைகளை நோக்கிச் சுடுகிற
போராளிகளின் மனங்களில் இருந்தன
பசுமையான கிராமங்களும்
அங்கு நடமாடித் திரிகிற சனங்களும்.

- தீபச்செல்வன் (deebachelvan@gmail.com)

No comments:

Post a Comment