ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.
இரவெனும் கருப்புச் சூரியன்
வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.
நெட்டித் தள்ளியும் நகராத காலம்
எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.
இதோ வந்தது முடிவென்ற
சாமச் சேவலின் கூவல்
ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.
இரண்டாம் தஞ்சம்
பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.
நாதியற்றுப்போன நாரைகள்
கால்நடைகளின் காலசைப்பில்
கண் வைத்துக் காத்திருக்கும்.
எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?
தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த
மனிதன் ஒருவன்
ஒட்டடை படிந்த தலையுடன்
வாசல் திறந்து வருகிறான்
கோதும் விரல்களிடம்.
காயும் நிலவிலும் கிராமக் குடிசை
இருள் மூலைகள் வைத்திருக்கும்
மறக்காமல்
மின்மினிக்கு.
வாழும் பிரமைகள்
காலம் அழிந்து
கிடந்த நிலையில்
கடல் வந்து போயிருக்கிறது.
கொடிக்கம்பியும் அலமாரியும்
அம்மணமாய்ப் பார்த்து நிற்க
வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.
நினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும்
காற்றில் கரைந்துவிட
வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.
பெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள்
மறந்த மனதின்
இருண்ட மூலைகளினின்று
வெளிப்பட்டு
உடல் தேடி அலைவதால்
எங்கும் துணியின் சரசரப்பு.
அன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா
தசைகளின் சுடரை
நகல் எடுக்க முயன்று
கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.
இறந்த நாள்களின்
குளிர் நீளக் கைகள்
நீண்டு வந்து
மறதியைக் கொண்டு தூர்த்துவிட
கற்பனைக்கும் சொந்தமில்லை
கோலங்கள்.
---shibli
No comments:
Post a Comment