Tuesday, March 29, 2011

திருமணம் செய்ய என்ன என்ன தகுதிகள் வேண்டும்? ( IT துறையினருக்கு மட்டும்)

இந்தப் பதிவானது முற்றிலும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT Field) சார்ந்தது. மற்ற துறையினரின் அனுபவங்கள் எல்லாம் வழக்கமான சிக்கல்களை கொண்டது தான் என்பதால் அவற்றுக்குள் செல்ல வேண்டியது இல்லை. திருமணம் செய்ய என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது இன்றைய சூழ்நிலையில் மென்பொருள் துறையை சேர்ந்த ஆண் ஒருவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளில் இருந்து நாம் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தைக் காண்போம் அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகள்.

  1. நீங்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் ?

  2. எத்தனை ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள்?

  3. உங்களுடைய சம்பளம்?

  4. நீங்கள் பள்ளிக் கல்வியை எங்கு படித்தீர்கள் ?

  5. கல்லூரிக் கல்வியை எங்கு படித்தீர்கள்?

  6. உங்களது உயர்கல்வியை நீங்கள் முழு நேரப் படிப்பாக படித்தீர்களா அல்லது தொலைநிலைக் கல்வி வழியாகவா ?

  7. அந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமா ?

  8. பன்னாட்டு நிறுவனம் என்றால் வெளிநாட்டைத் தலைமையிடமாகக் கொண்டதா அல்லது இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டதா ?

  9. நீங்கள் எந்த துறை (domain) சார்ந்து பணி புரிகிறீர்கள்?

  10. நீங்கல் பணி புரிவது நிரலாளராகவா (developer) அல்லது தரக் கட்டுப்பாடா (tester)?

  11. நிரலாளர் என்றால் எந்த தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுகிறீர்கள் (Java or .Net or any others) ?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளைத் தவிர்த்து துறை சாராத மற்ற விடயங்களான சொத்து ,சாதகப் பொருத்தம், குலம்,கோத்திரம்,குடும்பம் இத்தியாதி இத்தியாதிகளும் கேட்கப் பட்டது. இத்தனைக்கும் கேள்வி கேட்டவரின் வயது முப்பதுக்கு மேல். இதைப் பார்க்கும்பொழுது இவர்கள் திருமணம் செய்யத்தான் இதை கேட்கிறார்களா அல்லது வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. அதவாது அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இரவில் குடை பிடிப்பான் என்ற முது மொழிக்கேற்பதான் இதைக் காணவேண்டியுள்ளது.


சமூகமானது நிலப் பிரபுவத்துவ மதிப்பீடுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி முதலாளித்துவ மதிப்பீடுகளுக்கு சென்றுகொண்டிருந்தாலும் அதை தங்களது வசதிக்கு ஏற்ப சிலதை ஏற்றுக் கொண்டும் சிலதை விட்டு விட்டும் தொடர்ந்து பண்பாட்டு முன்னகர்வில் செல்கிறது.


மேலைத்தேய நாடுகளைப் போல நிலப்பிரபுத்துவம் அதிலிருந்து உற்பத்தி சார்ந்து முதலாளித்துவம் என படிப் படியாக மாற்றம் நிகழாமல் நமது நாட்டில் சட்டென பெருவளர்ச்சி கண்ட பணித்துறையின்(Service Sector) காரணமாக நிலப்பிரபுத்துவத்தை வைத்துக்கொண்டே முதலாளித்துவத்துக்குள் நுழைந்ததால் இது போன்ற சிக்கல்கள் உருவாகின்றன.





இது மென்பொருள் துறையைப் பொறுத்த அளவில் திடீரென எட்டு கால் பாய்ச்சலில் சென்று முழுக்க மாறிவிட்டதை போன்று ஒரு மெய்நிகர் தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் சமூகம் அந்த அளவு முதிர்ச்சி அடையவில்லை அதற்கு இந்த கேள்விகளைக் கேட்டவரின் வயதே சான்று. அதாவது அவரிடம் என்ன தகுதி பொருளாதாரம்,வேலை இருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள ஒரு சராசரி ஆணின் நிலப் பிரபுத்துவ மனம் ஒப்பவில்லை. இது போன்ற தகுதிகளைக் கொண்ட எனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது (சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம், சிறிய வயதிலேயே அவர் மேலாளராகி விட்டார்) அவர் சொன்னது எனக்கு வரும் மனைவி வேலைக்கு செல்ல கூடாது என்றார்.



இது கேள்விகளைக் கேட்ட அந்தப் பெண்ணின் அளவுகோலுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. தன்னைவிட தகுதி குறைந்த சம்பளம் குறைவாக வாங்கும் ஆணை எந்தப் பெண்ணுமே அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அந்த அளவு தகுதி உள்ள ஆண் அதற்கு நேர் எதிராக சிந்திக்கிறார்.(நான் வாங்கும் சம்பளமே போதும் எனக்கு துணையாக வருபவர் வீட்டில் இருந்தால் போதும்) .


பெண்களின் இந்த எதிர்பார்ப்புகளை தவறென்றும் சொல்லவில்லை அவர்கள் வேலைக்கு சென்று பெரிதாக சம்பாதித்தாலும் சமூகமும் உடனே மாறி விடாது இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் சமூக மாற்றங்களை உருவாக்க முடியாது.அவர்களை மதிக்க வேண்டும் சமமாக நடத்த வேண்டும் என்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை.


ஆனாலும் பரந்த சிந்தனை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் இவர்களின் சாதி அல்லாமால் வேறு ஏதானும் சாதியில் இருப்பார்கள். அதாவது முன்னாடி சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் நிலை (deadlock situation). (எல்லோராலும் காதலிக்கவும் முடிவதில்லை :))



சரி இதற்கு என்ன தான் தீர்வு? முதலில் இந்த சமூகத்தைப் பற்றி தெளிவான பார்வை வர வேண்டும் பின்னர் அந்தப் பார்வையில் நமது மதிப்பீடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். ஒரு ஆழ்ந்த புரிதல், விட்டுக் கொடுத்தல், திருமணம் செய்ய அவர் பணிபுரியும் தொழில்நுட்பப் பிரிவுகளை கேட்பது போன்ற முட்டாள் தனமான நடவடிக்கைகளை கைவிடுதல் போன்ற பல "தல்" களின் மூலம் இது முடிவுக்கு வரலாம். ஆனால் மேற் சொன்னதைப் போன்றே அந்த அளவு பக்குவம் வர நீண்ட காலம் பிடிக்கலாம். உங்களது கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்



Wednesday, March 16, 2011

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம்.

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம் எதிர்காலத்தில் நிச்சயம் வைகோ தனக்கு போட்டியாக வருவார் என்ற அச்சத்தின் காரணமாகத்தான். இது நிச்சயம் நகைப்புக்குரியதாக தோன்றலாம் ஆனால் உண்மை மறுக்க முடியாத உண்மை. கொஞ்சம் தர்க்க ரீதியாக சிந்தித்தால் இதன் நீண்ட கால சதித் திட்டம் புலப்படும். தமிழக அரசியலை தொடர்ந்து அவதானித்தால் ஒரு சில கட்சிகள் விஷய புகழ் பெற்று முன்னுக்கு வந்தது பின்னர் காணாமல் போனது. த.மா.கா அந்த வகையில் குறிப்பிடத் தக்க கட்சி அது போல எந்த விதமான தெளிந்த அரசியல் சிந்தனைகளும் அற்ற விசயகாந்தின் கட்சியும் கொ.மு.க போன்ற கட்சிகளும் இதில் அடங்கும்.
இப்படி ஒரு சூழ்நிலையை சிந்தித்தால்
கலைஞரின் மறைவுக்குப் பின் எந்த வித தலைமையும் சரியாக அமையாமல் தி.மு.க சிதைவடையத் தொடங்குகிறது. அதில் உள்ள பெருந்தலைகள் எல்லோரும் வைகோவின் பின்னால் அணி வகுக்கத் தொடங்குகிறார்கள். இந்த இடத்தில் தி.முக வை வைகோ கைப்பற்றுகிறார் பின்னர் அவருக்குப் போட்டி நிச்சயம் வைகோ தான்.

காங்கிரசோ நிச்சயம் அந்த இடத்தை நிரப்ப முடியாது ஏனெனில் தமிழக மக்களைப் பொறுத்த அளவில் தலைவர் என்பவர் உள்ளூரில் இருக்க வேண்டும் திராவிட கட்சியாக இருக்க வேண்டும்.
விசயகாந்தும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு தலைமைப் பண்பு இல்லை அவருக்கு வாக்களித்த பலரிடம் கேட்டறிந்த வகையில் இரண்டு பெரிய கட்சி கூட்டணிகளையும் பிடிக்காதவர்கள் இவருக்கு வாக்களித்தார்கள். ஒரு கூட்டணியில் சேர்ந்ததால் இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விட்டார்.
இரண்டே இரண்டு காரணங்கள் மட்டும் தான் இறுதியாக தெரிகிறது.
1. நீண்ட கால காரணம் கலைஞருக்குப் பின் பெரிய தலைவராக உருவெடுக்கும் வாய்ப்பு
2 குறுகிய காலத்தில் ஒரு எழுபது தொகுதிகள் வென்றால் காங்கிரஸ் ஒரு ஐம்பது அல்லது நாப்பதில் வென்றால் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு மறைமுகத்திட்டம் வைத்துள்ளாரோ என்று ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை









Monday, March 14, 2011

இருமைவாதமும் தமிழ் சமூகமும்

தமிழ் நாட்டில் மட்டுமே உண்மை இரண்டு உண்மைகளாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சியில் மக்கள் பேரின்பத்தில் இருக்கிறார்கள் மற்றொரு தொலைக்காட்சியில் மக்கள் பெரும் துன்பத்தில் உழல்கிறார்கள்.
மேனாள் அமெரிக்க அரசு தலைவர் சார்சு புசு சொன்னதைப் போல "நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எதிரியுடன் இருப்பதாகத் தான் அர்த்தம்" என்று அச்சுறுத்துகின்றன நடு நிலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறை கூவல் விடுகின்றன.
ஆனால் உண்மையான உண்மை என்பது இந்த இரண்டிற்கும் நடுவில் தான் இருக்கிறது
தமிழ் சமூகமே இருமை வாதத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது.இருமை வாதம் என்றவுடன் நன்மை தீமை என்ற இரண்டுக்குமான போராட்டம் என்ற அளவில் நினைத்து விடக் கூடாது அது இரண்டுமே தீமை என்ற அளவில் கெட்டஇருமைகள் ஆக இருக்கின்றன. முதலில் ஒரு அமைப்பு தொடங்கப் படுகிறது பின்னர் அது மெள்ள தீமையை நோக்கி பயணிக்கிறது அந்த தீமைக்கு மாற்றாக நன்மை என்ற பெயருடன் மற்றொரு அமைப்பு வருகிறது பின்னர் அதுவே தீமையை நோக்கி சென்று இன்னொரு மையப் புள்ளியாக மாறத் தொடங்குகிறது.அந்த மையப் புள்ளியிலிருந்து மீண்டும் பல சிதைவுகள் எனத் தொடர்கிறது.இந்த வாதம் திரைத்துறை, அரசியல் மட்டுமல்லாமல் இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்த இருமைகளைத் தாண்டி மற்றவற்றின் இருப்பிற்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இதன் பட்டியல் நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் சேர்த்தே அளிக்கிறது.

தி.மு.க X அ.தி.மு.க
ம.ம.க X இ.யு மு.லீ
மு.மு.க X இன்னொரு மு.மு.க
வி.சி.க X இ .கு.க
பு.த X த.மு.க
கொ.மு.க X கொ.இ.பே.
அ.இ .ச ம.க X பெ.ம.க

திரைப்படத்துறை.
எம்.ஜி.ஆர் X சிவாஜி
ரஜினி X கமல்
அஜித் X விஜய்
சூர்யா X விக்ரம்.
சிம்பு X தனுஷ்

இதழ்கள்
குமுதம் X ஆனந்த விகடன்.
இலக்கியம்
காலச்சுவடு X உயிர்ம்மை
சாரூ நிவேதிதா X ஜெயமோகன்.
தொலைக் காட்சி
கலைஞர் X ஜெயா
இப்படிப் பட்டியல் நீள்கிறது நேர் எதிர் என்று இல்லாமல் இரண்டுமே தீமைகளாகி வெகு நாட்களாகிறது.