Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, March 29, 2011

திருமணம் செய்ய என்ன என்ன தகுதிகள் வேண்டும்? ( IT துறையினருக்கு மட்டும்)

இந்தப் பதிவானது முற்றிலும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT Field) சார்ந்தது. மற்ற துறையினரின் அனுபவங்கள் எல்லாம் வழக்கமான சிக்கல்களை கொண்டது தான் என்பதால் அவற்றுக்குள் செல்ல வேண்டியது இல்லை. திருமணம் செய்ய என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது இன்றைய சூழ்நிலையில் மென்பொருள் துறையை சேர்ந்த ஆண் ஒருவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளில் இருந்து நாம் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தைக் காண்போம் அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகள்.

  1. நீங்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் ?

  2. எத்தனை ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள்?

  3. உங்களுடைய சம்பளம்?

  4. நீங்கள் பள்ளிக் கல்வியை எங்கு படித்தீர்கள் ?

  5. கல்லூரிக் கல்வியை எங்கு படித்தீர்கள்?

  6. உங்களது உயர்கல்வியை நீங்கள் முழு நேரப் படிப்பாக படித்தீர்களா அல்லது தொலைநிலைக் கல்வி வழியாகவா ?

  7. அந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமா ?

  8. பன்னாட்டு நிறுவனம் என்றால் வெளிநாட்டைத் தலைமையிடமாகக் கொண்டதா அல்லது இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டதா ?

  9. நீங்கள் எந்த துறை (domain) சார்ந்து பணி புரிகிறீர்கள்?

  10. நீங்கல் பணி புரிவது நிரலாளராகவா (developer) அல்லது தரக் கட்டுப்பாடா (tester)?

  11. நிரலாளர் என்றால் எந்த தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுகிறீர்கள் (Java or .Net or any others) ?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளைத் தவிர்த்து துறை சாராத மற்ற விடயங்களான சொத்து ,சாதகப் பொருத்தம், குலம்,கோத்திரம்,குடும்பம் இத்தியாதி இத்தியாதிகளும் கேட்கப் பட்டது. இத்தனைக்கும் கேள்வி கேட்டவரின் வயது முப்பதுக்கு மேல். இதைப் பார்க்கும்பொழுது இவர்கள் திருமணம் செய்யத்தான் இதை கேட்கிறார்களா அல்லது வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. அதவாது அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இரவில் குடை பிடிப்பான் என்ற முது மொழிக்கேற்பதான் இதைக் காணவேண்டியுள்ளது.


சமூகமானது நிலப் பிரபுவத்துவ மதிப்பீடுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி முதலாளித்துவ மதிப்பீடுகளுக்கு சென்றுகொண்டிருந்தாலும் அதை தங்களது வசதிக்கு ஏற்ப சிலதை ஏற்றுக் கொண்டும் சிலதை விட்டு விட்டும் தொடர்ந்து பண்பாட்டு முன்னகர்வில் செல்கிறது.


மேலைத்தேய நாடுகளைப் போல நிலப்பிரபுத்துவம் அதிலிருந்து உற்பத்தி சார்ந்து முதலாளித்துவம் என படிப் படியாக மாற்றம் நிகழாமல் நமது நாட்டில் சட்டென பெருவளர்ச்சி கண்ட பணித்துறையின்(Service Sector) காரணமாக நிலப்பிரபுத்துவத்தை வைத்துக்கொண்டே முதலாளித்துவத்துக்குள் நுழைந்ததால் இது போன்ற சிக்கல்கள் உருவாகின்றன.





இது மென்பொருள் துறையைப் பொறுத்த அளவில் திடீரென எட்டு கால் பாய்ச்சலில் சென்று முழுக்க மாறிவிட்டதை போன்று ஒரு மெய்நிகர் தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் சமூகம் அந்த அளவு முதிர்ச்சி அடையவில்லை அதற்கு இந்த கேள்விகளைக் கேட்டவரின் வயதே சான்று. அதாவது அவரிடம் என்ன தகுதி பொருளாதாரம்,வேலை இருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள ஒரு சராசரி ஆணின் நிலப் பிரபுத்துவ மனம் ஒப்பவில்லை. இது போன்ற தகுதிகளைக் கொண்ட எனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது (சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம், சிறிய வயதிலேயே அவர் மேலாளராகி விட்டார்) அவர் சொன்னது எனக்கு வரும் மனைவி வேலைக்கு செல்ல கூடாது என்றார்.



இது கேள்விகளைக் கேட்ட அந்தப் பெண்ணின் அளவுகோலுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. தன்னைவிட தகுதி குறைந்த சம்பளம் குறைவாக வாங்கும் ஆணை எந்தப் பெண்ணுமே அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அந்த அளவு தகுதி உள்ள ஆண் அதற்கு நேர் எதிராக சிந்திக்கிறார்.(நான் வாங்கும் சம்பளமே போதும் எனக்கு துணையாக வருபவர் வீட்டில் இருந்தால் போதும்) .


பெண்களின் இந்த எதிர்பார்ப்புகளை தவறென்றும் சொல்லவில்லை அவர்கள் வேலைக்கு சென்று பெரிதாக சம்பாதித்தாலும் சமூகமும் உடனே மாறி விடாது இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் சமூக மாற்றங்களை உருவாக்க முடியாது.அவர்களை மதிக்க வேண்டும் சமமாக நடத்த வேண்டும் என்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை.


ஆனாலும் பரந்த சிந்தனை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் இவர்களின் சாதி அல்லாமால் வேறு ஏதானும் சாதியில் இருப்பார்கள். அதாவது முன்னாடி சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் நிலை (deadlock situation). (எல்லோராலும் காதலிக்கவும் முடிவதில்லை :))



சரி இதற்கு என்ன தான் தீர்வு? முதலில் இந்த சமூகத்தைப் பற்றி தெளிவான பார்வை வர வேண்டும் பின்னர் அந்தப் பார்வையில் நமது மதிப்பீடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். ஒரு ஆழ்ந்த புரிதல், விட்டுக் கொடுத்தல், திருமணம் செய்ய அவர் பணிபுரியும் தொழில்நுட்பப் பிரிவுகளை கேட்பது போன்ற முட்டாள் தனமான நடவடிக்கைகளை கைவிடுதல் போன்ற பல "தல்" களின் மூலம் இது முடிவுக்கு வரலாம். ஆனால் மேற் சொன்னதைப் போன்றே அந்த அளவு பக்குவம் வர நீண்ட காலம் பிடிக்கலாம். உங்களது கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்



Monday, March 14, 2011

இருமைவாதமும் தமிழ் சமூகமும்

தமிழ் நாட்டில் மட்டுமே உண்மை இரண்டு உண்மைகளாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சியில் மக்கள் பேரின்பத்தில் இருக்கிறார்கள் மற்றொரு தொலைக்காட்சியில் மக்கள் பெரும் துன்பத்தில் உழல்கிறார்கள்.
மேனாள் அமெரிக்க அரசு தலைவர் சார்சு புசு சொன்னதைப் போல "நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எதிரியுடன் இருப்பதாகத் தான் அர்த்தம்" என்று அச்சுறுத்துகின்றன நடு நிலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறை கூவல் விடுகின்றன.
ஆனால் உண்மையான உண்மை என்பது இந்த இரண்டிற்கும் நடுவில் தான் இருக்கிறது
தமிழ் சமூகமே இருமை வாதத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது.இருமை வாதம் என்றவுடன் நன்மை தீமை என்ற இரண்டுக்குமான போராட்டம் என்ற அளவில் நினைத்து விடக் கூடாது அது இரண்டுமே தீமை என்ற அளவில் கெட்டஇருமைகள் ஆக இருக்கின்றன. முதலில் ஒரு அமைப்பு தொடங்கப் படுகிறது பின்னர் அது மெள்ள தீமையை நோக்கி பயணிக்கிறது அந்த தீமைக்கு மாற்றாக நன்மை என்ற பெயருடன் மற்றொரு அமைப்பு வருகிறது பின்னர் அதுவே தீமையை நோக்கி சென்று இன்னொரு மையப் புள்ளியாக மாறத் தொடங்குகிறது.அந்த மையப் புள்ளியிலிருந்து மீண்டும் பல சிதைவுகள் எனத் தொடர்கிறது.இந்த வாதம் திரைத்துறை, அரசியல் மட்டுமல்லாமல் இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்த இருமைகளைத் தாண்டி மற்றவற்றின் இருப்பிற்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இதன் பட்டியல் நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் சேர்த்தே அளிக்கிறது.

தி.மு.க X அ.தி.மு.க
ம.ம.க X இ.யு மு.லீ
மு.மு.க X இன்னொரு மு.மு.க
வி.சி.க X இ .கு.க
பு.த X த.மு.க
கொ.மு.க X கொ.இ.பே.
அ.இ .ச ம.க X பெ.ம.க

திரைப்படத்துறை.
எம்.ஜி.ஆர் X சிவாஜி
ரஜினி X கமல்
அஜித் X விஜய்
சூர்யா X விக்ரம்.
சிம்பு X தனுஷ்

இதழ்கள்
குமுதம் X ஆனந்த விகடன்.
இலக்கியம்
காலச்சுவடு X உயிர்ம்மை
சாரூ நிவேதிதா X ஜெயமோகன்.
தொலைக் காட்சி
கலைஞர் X ஜெயா
இப்படிப் பட்டியல் நீள்கிறது நேர் எதிர் என்று இல்லாமல் இரண்டுமே தீமைகளாகி வெகு நாட்களாகிறது.



Saturday, February 19, 2011

நகரத்தில் வாழ்பவர்கள் மட்டுமே மனிதர்கள் facebook அராஜகம்..!

நீங்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமா facebook இல் கட்டாயம் உறுப்பினராக இருந்தாக வேண்டும் என்ற நிலைக்கு சமூகம் சென்று கொண்டிருக்கிறது. பலர் இதற்க்கு அடிமையாகி விட்டனர்.இன்றைய வாழ்வின் தவிர்க்கவியலாத அளவு சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இருக்கிறது வெறும் சமூக வலைத்தளம் என்ற அளவில் இருந்து facebook எனும் முகநூல் பன்முக பயன்பாடுகளை கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்தத் தளம் தன்னளவில் பன்முகத்தன்மையை மறுக்கிறது அதவாது உங்களது சொந்த ஊர் என்ற இடத்தில் நீங்கள் உங்களது சிற்றூரின் (கிராமத்தின்) பெயரை டைப் செய்ய முடியாது அதில் ஏற்கனவே உள்ளீடு செய்யப் பட்டுள்ள ஒரு பட்டியலில் இருந்தே அதை தெரிவு செய்ய முடியும்.

இந்த இடத்தில் அது home town என்று மட்டுமே இருக்கிறது. நீங்கள் ஒரு சிற்றூரை சேர்ந்தவராக இருந்தால் அதை இதில் குறிப்பிட முடியாது.அதாவது நகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே மனிதர்கள் என்று சொல்கிறது எனத் தோன்றுகிறது. முக நூலின் இந்த அடையாள மறுப்பையும் பாசிச போக்கையும் கண்டிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு ?

Thursday, January 13, 2011

சாப்ட்வேர் என்ஜினீயரை கொண்டாடாத சமூகம் உருப்படாது?

மாபெரும் ஆன்மா ஒன்று மனித குலத்தை மென்பொருள் துறையாகவும் மென்பொருள் அல்லாத துறைகளாவும் பிரிக்குமென்றால் நான் மென்பொருள் துறையோடுதான் இருப்பேன்.

எழுத்தாளனை கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.எனக்கு தெரிந்த அளவில் மற்ற துறையினர் யாரும் இந்த அளவுக்கு சமூகத்தை குறை சொல்பவர்களாக இல்லை.அதை ஒரு வாதத்திற்கு சரியென்றே வைத்தாலும் ஒரு சமூக அமைப்பில் மற்ற தொழில் செய்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு உதாரணத்திற்கு நான் சார்ந்திருக்கிற மென்பொருள் துறையை எடுத்துக்கொள்வோம்.

இந்த சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை மென்பொருள் துறை வழங்கி வருகிறது.அதை வெறும் பொருளியல் தளத்தில் வைத்து மட்டும் அல்ல மற்ற தளங்களில் அதன் பயன்பாட்டை,வீச்சை  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அனுபவித்து வருகிறார்கள்.
இதன் நேரடி பயன்பாடுகள் என்ற அளவில் எல்லா கட்டணங்களும் இன்று online முறைக்கு விட்டார்கள். பயன்பாடுகளை கொஞ்சம் பார்ப்போம்.
  • மின்கட்டணம்
இது தமிழமெங்கும் online  முறைக்கு மாறியதால் எனது ஊரில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்து அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் கட்டினால் கூட மீதி வரும் தொகையில் சில்லறை சுமார் நான்கு ருபாய் வரை இருந்தால் கூட கிடைக்காது.இவ்வாறு அறவிடும் தொகையில் அந்த ஊழியர் பணி நேரத்திலேயே கம கம வென்று இருப்பார். இந்த தொல்லை இனி அறவே இல்லை. ஆனாலும் இன்னும் பெரும் அளவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுவும் மாறும் என்று நம்புவோம். தமிழக அரசின் மின் கட்டணத்திற்கான இணையத்தளம் இது தான் https://www.tnebnet.org/awp/TNEB/.

தமிழக அரசின் இந்த முயற்சியை பாராட்டுகிற இவ்வேளையில் இதற்க்கு பின்னால் உள்ள கண்ணுக்கு தெரியாத மென்பொருள் துறையினரின் உழைப்பை கொண்டாடாத சமூகம் உருப்படாது :)
  • தொடர் வண்டி பயண முன்பதிவு, வங்கி நடவடிக்கைகள்
தொடர் வண்டி பயண முன்பதிவு, வங்கி நடவடிக்கைகள் என்பன நமது வாழ்வின் ஒரு கொடும் கனவாகத்தான் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வங்கி ஊழியர்கள் நம்மை நடத்தும் விதம்.(ஏதாவது விபரம் தெரியாமல் சென்று விளக்கம் கேட்டால் போதும்,வேற்று கிரக ஜந்துவைப் பார்ப்பது போல பார்ப்பார்கள்) இன்று அந்த இருண்ட  காலம் முடிவடைந்து விட்டது.இன்று முகவரி மாற்றம் போன்ற தவிர்க்க முடியாதவற்றிற்கு  மட்டுமே அந்த அற்புத "முகங்களை" தரிசனம் செய்யவேண்டியது இருக்கிறது.பல வங்கிகள் paasbook இல் பதிவேற்றுவது என்ற நடைமுறைகளை அறவே ஒழித்து விட்டார்கள். இதற்கும் யார் காரணம் ? மென்பொருள் பொறியாளர்கள் தானே ? ஏன் ஒரு நாளாவது தானியங்கி எந்திரங்களின் முன் யாரவது அவர்களை வணங்கி நன்றி செலுத்தி உள்ளார்களா ?. சிந்திக்க சிந்திக்க இந்த சமூகம் நம்  மீது கொண்டுள்ள நன்றியின்மையும் வஞ்சமும் புலப்படுகிறது. :)

மளிகைக்கடை முதல் மாட மாளிகைகளைக் கட்டும் கட்டிடத்துறை வரை தொலை தொடர்பு முதல் தொ(ல்)லைகாட்சி வரை !
பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை என்று கருவறை முதல் கல்லறை வரை  மென்பொருள் துறையினரின் உழைப்பை இந்த சமூகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது ஆனால் இதற்காக மென்பொருள் துறைக்கென ஒரு நாளை ஒதுக்கி விழா எடுக்க மனம் இல்லை,மாறாக நமக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் அவப்பெயர்கள்,அவமானங்கள்,அவமரியாதைகள்தான் ("அ" வில் வேறு வார்த்தைகள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளவும்) எத்தனை எத்தனை !!
  • நாங்கள் ( மற்ற துறையினர்) ஒரு ஆண்டு சம்பாதிப்பதை இவர்கள்(மென்பொருள் துறையினர்) ஓரிரண்டு மாதங்களில் சம்பாதிக்கிறார்கள்.(இதற்கு காரணம் பண மதிப்பு, நாங்கள் அல்ல அய்யா)
  • வகை தொகையின்றி செலவு செய்யும் ஊதாரிகள்.(ஏன் மற்ற துறையில் இருப்பவர்கள் யாரும் ஊதாரித்தனமாக செலவு செய்வதில்லையா? ஊதாரித்தனம் என்பது ஒரு குணநலன் என்றுதான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம்  ஆனால்  அது ஒரு துறை சார்ந்த விடயம் என்று இவர்கள் "கண்டு"பிடித்துள்ளார்கள் (வாழ்க!,தொடர்க!)
  • வீட்டு வாடகை முதல் காய்கறி வரை விலை ஏறுவதற்கு காரணம் நாம் தான் ( ஐயாயிரம் பெறாத வீட்டை பனிரெண்டாயிரம் வாடகை சொல்லும் வீட்டு உரிமையாளர்களின் பேராசையை பற்றி இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்)
  • விழாக் காலங்களில் பொங்கி வழியும் போக்குவரத்திற்கு காரணமும் நாமே.(தெரியாமல் தான் கேட்கிறேன் வளர்ச்சியைப் பரவலாக்காமல் எல்லாவற்றையும் சென்னை,பெங்களூர்,ஹைதராபாத் என்று பெரு நகரங்களில் எல்லா நிறுவனங்களையும் அமைத்து (குவித்து)விட்டு பின்னர் அதற்கான போக்குவரத்து.அடிப்படைக் கட்டமைப்பு  வசதிகளை உருவாக்காமல் இருப்பது இந்த அரசின் குற்றமா இல்லை அது எம் குற்றமா? (மனோகரா பாணியில் வாசிக்கவும்))
  • இவர்களால் தான் கலாச்சாரம் கெடுகிறது குடித்து விட்டு கூத்தடிக்கிறார்கள்( குடிக்காத,கூத்தடிக்காத மற்ற துறை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் அய்யா அத்தோடு  இதைப்பற்றி எழுதவதை நிறுத்திவிடுகிறேன்) 
 எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்  நீங்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று எழுதுவதற்கு கூட ஒரு மென்பொருள் பொறியாளன் வடிவமைத்த வலைப்பூவைத்தான் பயன் படுத்துகிறீர்கள் அவர்களை என்றாவது கொண்டாடி உள்ளீர்களா என்று சிந்தியுங்கள்.

முடிவாக இவ்வளவு ஏச்சு பேச்சுக்களையும் இழி மொழிகளையும்  தாங்கி எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களாக வருவோம்.
வாழ்க மென்பொருள் துறை!! வளர்க்க அதன் புகழ்!!
மேரா சாப்ட்வேர் மகான் !! என்றே  சொல்லுவோம் !! பெருமிதம்  கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் !!!
இந்த 2011 ஆம் ஆண்டை மென்பொருள் ஆண்டாக அறிவிக்க வேண்டும் என நடுவண் அரசைக் கோரி நிறைவு செய்கிறேன் :)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!