Monday, January 24, 2011

கன்னட நாடல்லி ஜீவநதி காவேரி!!

கன்னட நாடல்லி ஜீவநதி காவேரி!! இது சமீபத்தில் நான் கேட்ட ஒரு கன்னட திரைப்படப் பாடல் ஆனால் உண்மையில் காவேரி என்பது கர்நாடாகவைப் பொறுத்தவரை ஜீவநதியும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது.

இது இனவெறி அரசியலிற்குதான் ஜீவநதியாகத் திகழ்கிறது. கன்னட வெறியர்கள், கன்னட திரைப்படத்துறை, கன்னட அரசியல்காரர்கள் இவர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பிதம். காவிரியின் மொத்த கொள்ளளவைவிடவும் ( கர்நாடகா, தமிழ் நாடு,புதுச்சேரி,கேரளா ஆகிய அனைத்து பங்கு தாரர்களுக்கும் சேர்த்து) கிருஷ்ணா நதியில் இருந்து கர்நாடகாவிற்கு கிடைக்கும் நீர் மிகவும் அதிகம்(666 tmc). கிருஷ்ணா நதி நீர் பிரச்சினையில் சமீபத்தில் வந்த தீர்ப்பை கூட யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் இருந்தே இதன் அரசியலை நாம் புரிந்துகொள்ளலாம். (வட கர்நாடகாவிற்கும், தென் கர்நாடகாவிற்கும் உணர்வு ரீதியில் ஒட்டுதல் இல்லை இது பற்றி தனி கட்டுரையே எழுதலாம்)

காவேரி பாயும் மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் மைசூரு,மண்டியா சாம்ராஜ் நகர் ஆகிய மூன்று மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்துவிடுகிறது. பெங்களுருவிற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதால் அரசியல் ரீதியாக இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது மேலும் பல ஆண்டுகளாக கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒக்கலிகர் செறிந்து வாழும் மாவட்டங்களில் இது ஓடுவதாலும் இந்த விபரீத விளைவு.

கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் பாயும் ஆறுகளான நேத்ராவதி, ஆர்க்காவதி ,ஷரவாதி ஆறுகளில் வருடத்துக்கு வீணாகும் தண்ணீர் மட்டும் இரண்டாயிரம் டி எம் சி க்கு மேல். இந்த ஆறுகள் மிகக் குறைந்த தூரம் நிலப் பரப்பில் பாய்ந்து கடலில் கலந்து விடுகின்றன. இந்த ஆறுகளில் இருந்து தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பி நீர் மின்சாரம் தயாரிக்க முடியும் மேலும் அவ்வாறு திருப்பும் நீரை காவேரி ஆற்றில் கலந்தால் ஏராளமான நீர் கிடைக்கும் . இது பற்றிய திட்ட வரைவு கூட முன் அரசின் வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு செய்ய வேண்டிய வேலை என்று எதுவும் இல்லை ஒரு ஒப்புதல் கையொப்பம் மட்டுமே ஆனால் அவர்களுக்கு பிரச்சினையை தீர்க்கும் ஆர்வமும் இல்லை.தமிழனுக்கு தண்ணீர் தர மனமும் இல்லை.

இது மூன்றாம் உலக நாடுகளுக்கே உரித்தான முதிர்ச்சியற்ற தன்மை. எங்கள் ஊரில் பரம்பிக்குளம் கால்வாய் ஓடுகிறது இதில் தண்ணீர் வரும் பொழுது ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் வரும். வராத வாரங்களில் மதகின் சிறிய இடைவெளிகளில் கசிவு நீர் வரும் அதை தலை மடைக்காரர்கள் கல்லை வைத்து அடைத்து அவர்களின் தோட்டங்களுக்கு மட்டுமே பாய்ச்சுவார்கள். அப்பொழுது எனக்கு இதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் காவேரி பிரச்சினையில் ஒப்பிடும்போது இதன் சிக்கலை உணர முடிந்தது.

ஒரு கிளை வாய்க்காலில் கூட தலை மடைக்காரர்கள் கல்லை வைத்து தண்ணீரை மடை மாற்றும் பொழுது அவ்வளவு பெரிய ஆற்றில் தலை மடைக்கார்கள் கல்லை வைக்காமல் இருப்பார்களா என்ன? ஆகவே இது மக்களின் அடிப்படையான தன்னலம் தான் இது போன்ற சிக்கல்களுக்கு காரணம்.தன்னலம் மாறாதவரை இதற்கு தீர்வுகளும் இல்லை.

Sunday, January 16, 2011

சத்யராஜின் "Fixed price" பகுத்தறிவு

பெண்கள் என்ன நகை மாட்டுகிற ஸ்டாண்டா எனக் குரலெழுப்பிய பெரியாரின் வழி வந்ததாக அடிக்கடி சொல்லி கொள்(ல்)கிறார் "இனமுரசு சத்யராசு".ஆனால் இப்பொழுது அடிக்கடி ஒரு நகைக்கடை விளம்பரத்தில் தோன்றி "Fixed price" இல் நகை வாங்க சொல்லி வலியுறுத்தி வருகிறார் இது எந்த வகையில் பகுத்தறிவு என்று புரியவில்லை. தனது சொந்த வாழ்வில் எல்லா முரண்பாடுகளையும் அனுமதித்துவிட்டு எல்லா கொள்கைகளையும் சமரசம் செய்துகொண்டு வாழலாம் அதே நேரத்தில் ஊருக்கு நன்றாக உபதேசம் செய்யலாம்.
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கறேன்னு அடிக்கடி சொல்றீங்க சார் ஆமாம் உங்க கேரக்டர புரிஞ்சுக்க முடியல  சார்.
அமைதிப்படை பாணியில "தீய முழுங்கச் சொன்னா திக்குன்னு இருக்கும் ,தேன தானே குடிக்க சொல்றான் அடி போகட்டு அடிச்சா போகுதுன்னு அடிசுடீன்களா சார் ?
பணம் குடுத்தா எப்படி வேணா எத வேணா விளம்பரம் செய்வீங்களா சார் ?
ஒரு பழைய படத்தில் டணால் தங்கவேலு அவர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி இவ்வாறு பேசுவார்
"இல்லாத கடவுளை கும்படரான்யா அதுவும் தொட்டு கும்படறான்.கேட்டா கடவுள் இருக்காரு ஆனா கண்ணுக்கு தெரியமாட்டார் நு சொல்றான் " கரண்ட் உம் தான் இருக்குது ஆனா கண்ணுக்கு தெரியல "தொட்டு" கும்பிடு பார்க்கலாம்!, "பட்டுன்னு" போயிருவே என்பார் பின்னாலிருந்து பல குரல்கள் ஒலிக்கும் "யோவ்  நாட்ட திருத்தறது இருக்கட்டும்"  மொதல்ல உன் வீட்ட திருத்து என்று"
இது தான் இன்றைய பகுத்தறிவின் நிலை.ஒரு பக்கம் வீரமணி ஜால்றாவின் எல்லையை தொட்டுவிட்டார் கலைஞர் தொலைக்காட்சியில் பட்டி மன்றங்களில் தோன்றி கலைஞரை புகழும் அளவுக்கு அரசனை மிஞ்சிய அரசு விசுவாசி ஆகிவிட்டார்.இதையெல்லாம் பார்க்கும் போது...

இனி ஒரு முறை உயிர் பெற்று நடந்து செல்லும்
வாய்ப்பு கிடைத்தால் இங்கே கல்லாலும் உலோகத்தாலும் ஆன சிலைகளாக நின்றிருக்கும் நீ, நான் படைக்க விரும்பிய தமிழகம் இதுவல்ல என்ற குற்ற உணர்வில் குறுகிச் சிறுத்திருப்பாய்....!

Thursday, January 13, 2011

சாப்ட்வேர் என்ஜினீயரை கொண்டாடாத சமூகம் உருப்படாது?

மாபெரும் ஆன்மா ஒன்று மனித குலத்தை மென்பொருள் துறையாகவும் மென்பொருள் அல்லாத துறைகளாவும் பிரிக்குமென்றால் நான் மென்பொருள் துறையோடுதான் இருப்பேன்.

எழுத்தாளனை கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.எனக்கு தெரிந்த அளவில் மற்ற துறையினர் யாரும் இந்த அளவுக்கு சமூகத்தை குறை சொல்பவர்களாக இல்லை.அதை ஒரு வாதத்திற்கு சரியென்றே வைத்தாலும் ஒரு சமூக அமைப்பில் மற்ற தொழில் செய்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு உதாரணத்திற்கு நான் சார்ந்திருக்கிற மென்பொருள் துறையை எடுத்துக்கொள்வோம்.

இந்த சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை மென்பொருள் துறை வழங்கி வருகிறது.அதை வெறும் பொருளியல் தளத்தில் வைத்து மட்டும் அல்ல மற்ற தளங்களில் அதன் பயன்பாட்டை,வீச்சை  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அனுபவித்து வருகிறார்கள்.
இதன் நேரடி பயன்பாடுகள் என்ற அளவில் எல்லா கட்டணங்களும் இன்று online முறைக்கு விட்டார்கள். பயன்பாடுகளை கொஞ்சம் பார்ப்போம்.
  • மின்கட்டணம்
இது தமிழமெங்கும் online  முறைக்கு மாறியதால் எனது ஊரில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்து அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் கட்டினால் கூட மீதி வரும் தொகையில் சில்லறை சுமார் நான்கு ருபாய் வரை இருந்தால் கூட கிடைக்காது.இவ்வாறு அறவிடும் தொகையில் அந்த ஊழியர் பணி நேரத்திலேயே கம கம வென்று இருப்பார். இந்த தொல்லை இனி அறவே இல்லை. ஆனாலும் இன்னும் பெரும் அளவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுவும் மாறும் என்று நம்புவோம். தமிழக அரசின் மின் கட்டணத்திற்கான இணையத்தளம் இது தான் https://www.tnebnet.org/awp/TNEB/.

தமிழக அரசின் இந்த முயற்சியை பாராட்டுகிற இவ்வேளையில் இதற்க்கு பின்னால் உள்ள கண்ணுக்கு தெரியாத மென்பொருள் துறையினரின் உழைப்பை கொண்டாடாத சமூகம் உருப்படாது :)
  • தொடர் வண்டி பயண முன்பதிவு, வங்கி நடவடிக்கைகள்
தொடர் வண்டி பயண முன்பதிவு, வங்கி நடவடிக்கைகள் என்பன நமது வாழ்வின் ஒரு கொடும் கனவாகத்தான் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வங்கி ஊழியர்கள் நம்மை நடத்தும் விதம்.(ஏதாவது விபரம் தெரியாமல் சென்று விளக்கம் கேட்டால் போதும்,வேற்று கிரக ஜந்துவைப் பார்ப்பது போல பார்ப்பார்கள்) இன்று அந்த இருண்ட  காலம் முடிவடைந்து விட்டது.இன்று முகவரி மாற்றம் போன்ற தவிர்க்க முடியாதவற்றிற்கு  மட்டுமே அந்த அற்புத "முகங்களை" தரிசனம் செய்யவேண்டியது இருக்கிறது.பல வங்கிகள் paasbook இல் பதிவேற்றுவது என்ற நடைமுறைகளை அறவே ஒழித்து விட்டார்கள். இதற்கும் யார் காரணம் ? மென்பொருள் பொறியாளர்கள் தானே ? ஏன் ஒரு நாளாவது தானியங்கி எந்திரங்களின் முன் யாரவது அவர்களை வணங்கி நன்றி செலுத்தி உள்ளார்களா ?. சிந்திக்க சிந்திக்க இந்த சமூகம் நம்  மீது கொண்டுள்ள நன்றியின்மையும் வஞ்சமும் புலப்படுகிறது. :)

மளிகைக்கடை முதல் மாட மாளிகைகளைக் கட்டும் கட்டிடத்துறை வரை தொலை தொடர்பு முதல் தொ(ல்)லைகாட்சி வரை !
பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை என்று கருவறை முதல் கல்லறை வரை  மென்பொருள் துறையினரின் உழைப்பை இந்த சமூகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது ஆனால் இதற்காக மென்பொருள் துறைக்கென ஒரு நாளை ஒதுக்கி விழா எடுக்க மனம் இல்லை,மாறாக நமக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் அவப்பெயர்கள்,அவமானங்கள்,அவமரியாதைகள்தான் ("அ" வில் வேறு வார்த்தைகள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளவும்) எத்தனை எத்தனை !!
  • நாங்கள் ( மற்ற துறையினர்) ஒரு ஆண்டு சம்பாதிப்பதை இவர்கள்(மென்பொருள் துறையினர்) ஓரிரண்டு மாதங்களில் சம்பாதிக்கிறார்கள்.(இதற்கு காரணம் பண மதிப்பு, நாங்கள் அல்ல அய்யா)
  • வகை தொகையின்றி செலவு செய்யும் ஊதாரிகள்.(ஏன் மற்ற துறையில் இருப்பவர்கள் யாரும் ஊதாரித்தனமாக செலவு செய்வதில்லையா? ஊதாரித்தனம் என்பது ஒரு குணநலன் என்றுதான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம்  ஆனால்  அது ஒரு துறை சார்ந்த விடயம் என்று இவர்கள் "கண்டு"பிடித்துள்ளார்கள் (வாழ்க!,தொடர்க!)
  • வீட்டு வாடகை முதல் காய்கறி வரை விலை ஏறுவதற்கு காரணம் நாம் தான் ( ஐயாயிரம் பெறாத வீட்டை பனிரெண்டாயிரம் வாடகை சொல்லும் வீட்டு உரிமையாளர்களின் பேராசையை பற்றி இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்)
  • விழாக் காலங்களில் பொங்கி வழியும் போக்குவரத்திற்கு காரணமும் நாமே.(தெரியாமல் தான் கேட்கிறேன் வளர்ச்சியைப் பரவலாக்காமல் எல்லாவற்றையும் சென்னை,பெங்களூர்,ஹைதராபாத் என்று பெரு நகரங்களில் எல்லா நிறுவனங்களையும் அமைத்து (குவித்து)விட்டு பின்னர் அதற்கான போக்குவரத்து.அடிப்படைக் கட்டமைப்பு  வசதிகளை உருவாக்காமல் இருப்பது இந்த அரசின் குற்றமா இல்லை அது எம் குற்றமா? (மனோகரா பாணியில் வாசிக்கவும்))
  • இவர்களால் தான் கலாச்சாரம் கெடுகிறது குடித்து விட்டு கூத்தடிக்கிறார்கள்( குடிக்காத,கூத்தடிக்காத மற்ற துறை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் அய்யா அத்தோடு  இதைப்பற்றி எழுதவதை நிறுத்திவிடுகிறேன்) 
 எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்  நீங்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று எழுதுவதற்கு கூட ஒரு மென்பொருள் பொறியாளன் வடிவமைத்த வலைப்பூவைத்தான் பயன் படுத்துகிறீர்கள் அவர்களை என்றாவது கொண்டாடி உள்ளீர்களா என்று சிந்தியுங்கள்.

முடிவாக இவ்வளவு ஏச்சு பேச்சுக்களையும் இழி மொழிகளையும்  தாங்கி எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களாக வருவோம்.
வாழ்க மென்பொருள் துறை!! வளர்க்க அதன் புகழ்!!
மேரா சாப்ட்வேர் மகான் !! என்றே  சொல்லுவோம் !! பெருமிதம்  கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் !!!
இந்த 2011 ஆம் ஆண்டை மென்பொருள் ஆண்டாக அறிவிக்க வேண்டும் என நடுவண் அரசைக் கோரி நிறைவு செய்கிறேன் :)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

Tuesday, January 11, 2011

பெங்களூர் தமிழ் சங்கம்: இது தேவையா?

பெங்களூர் தமிழ் சங்கம் வருகிற பொங்கலை ஒட்டி பல்வேறு நிகழ்சிகளை நடத்துகிறது.தமிழகத்தில் இருந்து "மானமிகு" வீரமணி கலந்து கொள்ளுகிறார்கள். வழக்கம்போல உணர்ச்சி வசப்படும் உரைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்றே நினைக்கறேன். இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் இதை தொடங்கும் போது ஒரு "பிரம்மாண்ட" ஊர்வலம் சென்று பின்னர் தொடங்குகிறார்கள். நிச்சயம் கன்னடர்கள் இதை ஒரு கெத்து காட்டுகிற வேலையாகத்தான் பார்ப்பார்கள் (பார்க்கிறார்கள்).
நாம் இருப்பது வேறு அந்நிய மொழிக்காரர்களின் ஊரில் என்ற பிரக்ஞ்யே இல்லாமல் அதுவும் நம் மீது வன்மம் அதிகம் இருக்கும் ஒரு ஊரில் இது தேவை அற்றது.
எனக்கென்னவோ இது போன்ற ஒன்று கூடல் நிகழ்வுகளை அரங்குகளுக்குள்ளேயே நடத்தினால் என்ன என்று தோன்றுகிறது.
மற்ற மொழிக்காரர்கள் யாரும் ஊர்வலம் எல்லாம் செல்வதில்லை.
குறிப்பாக மலையாளிகளிடம் நாம் பாடம் படிக்கவேண்டும். கன்னடியர்கள் கூட அவர்களை cunning mallu's என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
தமிழர்கள் எதற்கெடுத்தாலும் ஊர்வலம், பேரணி என்றே பழக்கப் பட்டு விட்டதனாலேயே இதை செய்ய வேண்டியதில்லை. அந்த ஊர்வலத்தில் ஒரு கல் வீசப்பட்டால் கூட கலவரமாக உருவெடுக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை ஒரு மாதிரியாக புரிந்து கொண்டு செயல் படாமல் இருப்பது நலம்.ஊரோடு ஒத்து வாழ வேண்டியது கூட இல்லை ஒத்திசைவு வாழ்வு தேவை என்பதே இக்கணத்தின் அடிப்படை.

Monday, January 10, 2011

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் செம்மொழிப் பட்டியலில் தமிழ் இல்லை

இன்பி நாராயண மூர்த்தி அவர்கள் செம்மொழிகளில் இருந்து படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்காக சுமார் இருபது கோடி ரூபாய் வரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். மொழி பெயர்க்கப் படும் நூல்கள் பின்னர் "The murthy's Classical Library" என்ற பெயரில் இந்தியாவில் நூலகமாக வைக்கப் படும். சரி அவர் பட்டியலில் என்ன என்ன மொழிகள் இருக்கிறது (தமிழும் இருக்கும் என்று நப்பாசையோடு) என்று ஆர்வத்தோடு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது

அந்த பட்டியல்


  • சமற்கிருதம்

  • பாரசீகம்

  • உருது.

என்ன மாதிரியான தயக்கம் என்று புரியவில்லை.

பாரசீகத்தை விடவா தமிழ் முக்கியத்துவம் இல்லாத மொழி ?

ஒருவேளை மொழிபெயர்க்கப் படும் அளவுக்கு தமிழில் இலக்கியங்களே இல்லை என்று கருதுகிறார்களோ என்று ஐயமாக இருக்கிறது.

ஓட்டுப் பொறுக்கி ஆகியே விட்டார் சீமான்!!

you too seeman?
வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு பரப்புரை செய்யப் போவதாக அறிவித்துள்ளார் சீமான்.இறுதியாக "செந்தமிழன்" சீமான் போயஸ் தோட்டத்தின் காலடியில் சரணடைந்து வீழ்ந்து விட்டார். உனக்கு எதுக்கையா தமிழ் தேசிய அரசியல் எல்லாம் ? வெங்காயம்.
விரைவில் கலைஞரிடம் இருந்து இவ்வாறு அறிக்கை வரலாம்
"தமிழ் தேசியத்துக்கென தயாரிக்கப்பட்ட துவக்கு இன்று ஊழல் அராஜக மாளிகையின் படிக்கட்டில் துருப் பிடித்து கிடக்கிறது"
ஈழத்தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார் தந்தை செல்வா. ஆனால் தமிழ் நாட்டுத்தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போல் தெரிகிறது. அய்யகோ !!!

தொப்பி தொப்பியே (துப்பி துப்பியே) பதில் சொல்லுங்கள்?

பதிவுலகில் திருட்டு டீவீடீ யை ஆதரிக்கும் தேசிய மயக்கம் கொண்ட தொப்பி தொப்பி என்பவரின் சீமானே பதில் சொல்லுங்கள் என்ற பதிவிற்கான எதிர்வினை தான் இது. முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள் நண்பரே.
  1. சீமானைப் பற்றி எழுதுவதற்காக யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள்?
  2. சீமானைப் பற்றி உடன் பிறப்புகள்,பொதுவுடமையாளர்கள் எழுதிய பதிவுகளை இலவச இணைப்பாக தருவது ஏன்? நீங்கள் தி மு கவினரின் கைக்கூலியா ?
  3. இந்திய தேசியம் என்பது என்ன ?
  4. கருநாடகாவில் தமிழர் கன்னடர் ஒற்றுமை கோடி கட்டிப் பறக்கிறதா ? சொல்லவே இல்ல. மொதல்ல கர்நாடகாவுல வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பறம் சொல்லுங்கய்யா ஒற்றுமையப்பத்தி. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை நிறுத்துக மேலும் கன்னடர் தமிழர் ஒற்றுமை பற்றி அறிய http://churumuri.wordpress.com/2007/05/09/churumuri-poll-who-killed-bangalore/
  5. சென்ற பாராளுமன்ற தேர்தலில் சீமான் பரப்புரை செய்த இடங்களில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியதே அதற்கு உங்கள் கருத்து துப்பல் ?
  6. இந்தி தேசிய மொழி, united states of india என்று வரலாறும் தெரியாமல் புவியியலும் தெரியாமல் உளறுவது ஏன் ? ப்ளாக் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காகவா ?
  7. வட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை காதலிக்கிறார்கள் என்று உளறுவது ஏன் ? (இந்த விவகாரம் நடந்தது கருநாடக மாநிலம் மங்களூர் மற்றும் கனர பகுதிகள் இதன் உண்மை தன்மை பற்றி வினவில் கட்டுரை வந்ததே (http://www.vinavu.com/2010/02/02/love-jihad/) இணைப்பு ஏன் தரவில்லை வினவில் இருந்து தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை வசதியாக மறந்து விடுவது என்ன selective amnesia வா ?
  8. எங்களது ஒற்றுமையைப் பதம் பாத்து தான் நீ அரசியல் லாபமும் பணமும் பெறவேண்டும் என நினைத்தால் அதற்கு என் நாட்டைப் பயன் படுத்த அனுமதிக்க மாட்டேன் --துப்பி துப்பி ( பெயர் காரணத்தை பின்பு விளக்குகிறேன் ) என்ன ஒரு தத்துவ முத்து (துப்பல்) பாருங்கள் நம்ம கிட்ட என்ன ஒற்றுமை வாழுதுன்னு கொஞ்சம் விளக்க முடியுமா ? காவிரி, முல்லைப் பெரியாறு இதெல்லாம் இந்தியாவில் தான் இருக்கிறதே அதே இந்தியாவில் இருக்கும் தமிழ் நாட்டிற்கு ஏன் தண்ணீர் வரவில்லை ? இது பற்றி சிந்திக்க உங்கள் தொப்பி போட்ட மண்டயில் மசாலா இல்லையா அல்லது உங்களது மூளைக்கும் சேர்த்து தொப்பி போட்டுக் கொண்டுள்ளீர்களா ?
  9. தமிழனை அங்கே அடிக்கிறான் இங்கே அடிக்கிறான் என்கிறாயே ? ஏன் தமிழன் என்பதற்காகவா அடித்தான் ? இது இவரின் இன்னொரு தத்துவ முத்து-- பின்ன எதுக்கய்யா அடிக்கிறான் ? கொஞ்சம் விளக்க முடியுமா ?
  10. சினிமா என்பதே ஆபாசம் என்று கூறும் அறிவு ஜீவியான நீங்கள் அதை திருட்டு டீவீடீ இல் பார்க்குமாறு வேண்டுவது ஏன் ? அப்படி அந்த ஆபாசக் குப்பைகளை பார்த்தால் மட்டும் எப்படி குடும்பம் முன்னேறும் அது மேலும் மேலும் சீரழிவைக் கொண்டுவந்து தானே நிறுத்தும் ?
  11. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தான் சிறையில் தான் தள்ளப் படுவேன் என்று சீமான் கூறி உள்ளாரே அதைப் பற்றி ஏன் கள்ள மௌனம் ?
  12. அயல் நாட்டில் உள்ள தீவிரவாத கும்பலிடம் பணம் வாங்கி கொண்டு சீமான் பேசுவதாக சொல்லும் நீங்கள் அந்த தீவிரவாத கும்பலின் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா ?
  13. தமிழர்களை இந்தியாவிற்கு எதிராக மாற்றித்தான் சீமான் அரசியல் செய்ய வேண்டுமா ? நல்ல இருக்கு கதை தமிழன் எப்போ எதிரா போனான் அந்த இந்தியா தானே தமிழனுக்கு எதிரா இருக்கு அத தானே சீமான் சொல்கிறார்
  14. உங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பம்மிக் கொண்டு பதிவு வசை பாடுவது ஏன் ?
  15. இறுதியாக "நமது" உறவு பலப்பட என்று ஒரு இணைப்பைக் கொடுத்துள்ளீர்களே அந்த நமது என்பது யார் ? உடன் பிறப்பு கும்பலா ?

இந்த கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்

இறுதியாக பெயர்க்காரணம் இவர் இந்த நபர் சீமான் மீது வசைமாரி பொழிவதாக நினைத்துக் கொண்டு இவர் மல்லாந்து படுத்துக் கொண்டு துப்பிக் கொண்டிருக்கிறார் எனவே இவரின் பெயர் துப்பி துப்பி என்று குறிப்பிடுகிறேன்

கருத்துக்களை திறந்த மனதோடு வரவேற்கிறேன் !!