Showing posts with label பார்வை. Show all posts
Showing posts with label பார்வை. Show all posts

Sunday, January 16, 2011

சத்யராஜின் "Fixed price" பகுத்தறிவு

பெண்கள் என்ன நகை மாட்டுகிற ஸ்டாண்டா எனக் குரலெழுப்பிய பெரியாரின் வழி வந்ததாக அடிக்கடி சொல்லி கொள்(ல்)கிறார் "இனமுரசு சத்யராசு".ஆனால் இப்பொழுது அடிக்கடி ஒரு நகைக்கடை விளம்பரத்தில் தோன்றி "Fixed price" இல் நகை வாங்க சொல்லி வலியுறுத்தி வருகிறார் இது எந்த வகையில் பகுத்தறிவு என்று புரியவில்லை. தனது சொந்த வாழ்வில் எல்லா முரண்பாடுகளையும் அனுமதித்துவிட்டு எல்லா கொள்கைகளையும் சமரசம் செய்துகொண்டு வாழலாம் அதே நேரத்தில் ஊருக்கு நன்றாக உபதேசம் செய்யலாம்.
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கறேன்னு அடிக்கடி சொல்றீங்க சார் ஆமாம் உங்க கேரக்டர புரிஞ்சுக்க முடியல  சார்.
அமைதிப்படை பாணியில "தீய முழுங்கச் சொன்னா திக்குன்னு இருக்கும் ,தேன தானே குடிக்க சொல்றான் அடி போகட்டு அடிச்சா போகுதுன்னு அடிசுடீன்களா சார் ?
பணம் குடுத்தா எப்படி வேணா எத வேணா விளம்பரம் செய்வீங்களா சார் ?
ஒரு பழைய படத்தில் டணால் தங்கவேலு அவர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி இவ்வாறு பேசுவார்
"இல்லாத கடவுளை கும்படரான்யா அதுவும் தொட்டு கும்படறான்.கேட்டா கடவுள் இருக்காரு ஆனா கண்ணுக்கு தெரியமாட்டார் நு சொல்றான் " கரண்ட் உம் தான் இருக்குது ஆனா கண்ணுக்கு தெரியல "தொட்டு" கும்பிடு பார்க்கலாம்!, "பட்டுன்னு" போயிருவே என்பார் பின்னாலிருந்து பல குரல்கள் ஒலிக்கும் "யோவ்  நாட்ட திருத்தறது இருக்கட்டும்"  மொதல்ல உன் வீட்ட திருத்து என்று"
இது தான் இன்றைய பகுத்தறிவின் நிலை.ஒரு பக்கம் வீரமணி ஜால்றாவின் எல்லையை தொட்டுவிட்டார் கலைஞர் தொலைக்காட்சியில் பட்டி மன்றங்களில் தோன்றி கலைஞரை புகழும் அளவுக்கு அரசனை மிஞ்சிய அரசு விசுவாசி ஆகிவிட்டார்.இதையெல்லாம் பார்க்கும் போது...

இனி ஒரு முறை உயிர் பெற்று நடந்து செல்லும்
வாய்ப்பு கிடைத்தால் இங்கே கல்லாலும் உலோகத்தாலும் ஆன சிலைகளாக நின்றிருக்கும் நீ, நான் படைக்க விரும்பிய தமிழகம் இதுவல்ல என்ற குற்ற உணர்வில் குறுகிச் சிறுத்திருப்பாய்....!

Sunday, December 13, 2009

மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-தந்தை பெரியார்

வ‌ன்னிப் ப‌டுகொலைக‌ளுக்குப் பின்ன‌ர் இல‌க்கிய‌த்துக்கான‌ சாத்திய‌ம் இருக்கிற‌தா..?

இப்பொழுது வ‌ன்னியில் ந‌டைபெறும் இன‌ப்ப‌டுகொலையான‌து ஜெர்ம‌னியின் ஆஷ்விட்சுக்கு இணையான‌ ஒரு நிக‌ழ்வாக‌வே தோன்றுகிற‌து.

நாள‌ந்த‌ம் இணைய‌த்த‌ள‌ங்க‌ளின் வாயிலாக‌ செய்திக‌ளைக் க‌ண்டு குற்ற‌ உண‌ர்வுக‌ளால் மூழ்க‌டிக்க‌ப்ப‌டுகிறோம்.இந்த‌ குற்ற‌ உண‌ர்வின் எல்லையாக‌ த‌ற்கொலைக‌ள் இருக்கின்ற‌ன‌.

இதை விவ‌ரிக்க‌ வார்த்தைக‌ளோ,க‌விதையோ வேறு எந்த‌ இல‌க்கிய‌ வ‌டிவ‌மோ ஏன் மொழியே கூட‌ ச‌க்திய‌ற்றுப்போய் விடுகிற‌தாக‌வே உண‌ருகிறேன்.

பேர‌ழிவு இல‌க்கிய‌ம்(Holocaust literature) என்ற‌ வ‌கையில் ஆஷ்விட்சில் சிக்கிய‌ யூத‌ர்க‌ளால் ப‌டைக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌.அவ‌ர்க‌ளாவ‌து இர‌ண்டாவ‌து உல‌க‌ப்போரின் முடிவில் விடுவிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் ஆனால் வ‌ன்னி த‌மிழ‌ர்க‌ளுக்கு விடுத‌லை என்ற‌ ஒன்று சாத்திய‌மா என்ற‌ அச்ச‌ம் ம‌ன‌தில் ப‌ர‌வுகிற‌து

அப்ப‌டியான‌ சாத்திய‌த்துக்கு முன்பே அங்கே யாரேனும் உயிரோடு மிஞ்சுவார்க‌ளோ என்ப‌தே ச‌ந்தேக‌ம் தான்.

வ‌ன்னியில் இற‌ப்ப‌து ம‌னித‌ன் ம‌ட்டும‌ல்ல‌ ம‌னித‌ன் என்ற‌ க‌ருத்தாக்க‌மும் தான்.

ரசிகர்மன்றங்கள் - முட்டாள்களின் கூடாரம்

அறிமுகமில்லாத, முகவரிதெரியாத பல திரைப்பட நடிகை, நடிகர்களின் புகைப்படங்களை இன்றைய இளைஞர்களில் 100-க்கு 75% பேர் தம்முடைய பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டுள்ளனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் இத்தகைய கேவலத்தை தொடருகின்றனர். யார் அவர்கள்? அவர்களின் சிறப்புத்தகுதிகள் என்ன? அவர்கள் நம்மிடமிருந்து எவ்வித்தில் வேறுபடுகின்றனர்? இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்திற்கும் பதில் "பெரிதாக ஒன்றுமில்லை" என்பதாகத் தான் இருக்கும். அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே தவிர! ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. ஆம்!!! இத்தகைய கற்பனையில்தாம் இன்றைய இளைஞர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கிறது போலும் அவர்களைப்பற்றி!?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைப் போல அவர்களுக்கும் 'நடிப்பு' ஒரு தொழில் அவ்வளவு தான். இதை மறந்து நம்மவர்கள் அவர்களைப் பற்றி ஏதோ பெரிய தலைவர்களைப் போல் கற்பனை செய்துகொண்டு பைத்தியக்காரணத்தனமாக அவர்களை பின்பற்றுவது மிகவும் வெட்கத்திற்கு உரியது.

அனைத்து ஊர்களிலும் எங்கு காணினும் பல நடிகர்களின் ரசிகர் மன்றப் பலாகைகள். இவர்களின் தொழில் என்ன? ஏதேனும், அந்த நடிகரின் புது திரைப்படம் வெளிவந்தால் கட்-அவுட் வைப்பது, பத்திரிக்கை அடித்து விளம்பரப்படுத்துவது........... இல்லையெனில், எப்போதாவது இரத்ததானம், கண்தானம் போன்றவற்றைச் செய்வது(எவருடைய பெயரையோச் சொல்லி?). அவர்களின் பல நடவடிக்கைகள் தேவையில்லாதவனவாகவும், சில (இரத்ததானம், கண்தானம் ) பாராட்டுக்குரியதாகவும் உள்ளன. இருப்பினும் அனைத்து ரசிகர் மன்றங்களும் இத்தகைய இரத்ததானம், கண்தானம் போன்றவற்றில் ஈடுபடுவது கிடையாது. சில மட்டும்தான். மற்றவை அனைத்தும் வேண்டாத வெட்டி விளம்பரத்திற்காகத் செயல்படுகின்றன என்பது மறுத்தற்கியாலாத ஒன்று.

இவர்களின் நடவடிக்கைகளை ஆழ்ந்து நோக்கின் அத்தனையும் வெறும் விளம்பரத்திற்காக, விளம்பரத்திற்காக மட்டுமே. தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே. அதேசமயம் இவர்களில் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தமக்குப் பிடித்த நடிகர்களின் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு சுயமாக சிந்திக்கத் தெரிந்த மனிதனும் இத்தகைய இழிச்செயலை செய்ய மாட்டான். மீறியும் கொண்டாடுபவர்களை சுயபுத்தியில்லாதவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும். தம் பெற்றோரின் பிறந்த நாள் (அ) திருமண நாள் கூட இவர்களுக்குத் தெரிந்திருக்காது.உங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்?....

உங்கள் பெற்றோரிடம் நீங்கள் ஆசையாக பேசியதுண்டா? உங்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டதுண்டா? உங்களையே நம்பிவந்த மனைவிக்கும், உங்களின் பாசத்தை, அரவணைப்பை என்றும் எதிர்பார்க்கும் குழந்தகளிடம் நட்பாக நடந்துகொண்டதுண்டா?உங்களில் எத்தனை பேர் மேற்கூறியவற்றுக்கு "ஆம்" என்று பதிலளிக்க முடியும்? அறிமுகமில்லாத ஒருவருக்காக, தொடர்பே இல்லாத ஒருவருக்காக நீங்கள் எதற்காக இவ்வளவு பணத்தை வெட்டியாய் வீண்செலவு செய்கிறீர்கள். அதனால் நீங்கள் அடைந்த லாபம்தான் என்ன? உங்களுக்கு அதனால் சிறிதளவேனும் மகிழ்ச்சி கிடைத்ததா நிரந்தரமாக எண்ணிப்பார்க்கும் அளவுக்கு!!! இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களோ அவர்களுக்காக மண்சோறு சாப்பிடுகின்றீர்கள். என்னவென்று சொல்வது உங்களைப் பற்றி?

உங்களைச் சுற்றி ஆயிரமாயிரம் பேர் வறுமையில் வாடி, வறுமையின் விளிம்பில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக நீங்கள் ஏதேனும் செய்ததுண்டா?(Atleast) அவர்கள் மீது இரக்கப்பட்டதாவதுண்டா?

யார் அந்த நடிகர்கள்? உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு, தொடர்பு? உங்களுக்காக அவர் என்ன செய்துள்ளார்? இதுவரை வந்த நடிகர்களும், இனி வரப்போகும் நடிகர்களும் இந்த மக்களின் முட்டாள்தனத்தை தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, அனைவரின் முகத்திலும் கரியைப் பூசிவிடுகின்றனர். இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்காது என நினைக்கிறேன். காரணம், உண்மை அதுதான்.

விளம்பர நோக்கில்லாமல், தன்னலம் கருதாமல், யாரையும் மிகைப் படுத்தாமல் மக்களின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு ரசிகர் மன்றம் செயல்படுகிறதா எனில், இந்தியா ஒன்று கூட கிடையாது. எத்தனை மாமேதைகள், தலைவர்கள் தங்களுடைய சுகதுக்கங்களை துறந்து, தம் பெற்றோர்,மனைவி, மக்கள் என எல்லோரையும் இழந்து, நாட்டிற்காக அரும்பாடுபட்டு, இரத்தம் சிந்தி, தம் இன்னுயிரையும் ஈந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு இங்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன? ஏன் அவர்களைப் பற்றிய சிறிய செய்திகளாவது தெரியுமா இவர்களுக்கு? அத்தனை உயர்ந்த தலைவர்களை மறந்துவிட்டு சிறுபிள்ளைத் தனமாக இவர்களின் பின்னால் செம்மறியாட்டு மந்தைப் போல தொடருவது எவ்வளவு கேவலத்துக்குரியது. மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அத்தகையப் பணியை தொடருவர்.

திரைப்படம் என்பது என்ன? அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் அவ்வளவுதான். இல்லையெனில் எப்போதாவது அரிதாக ஏதேனும் செய்தியைத் தரும் ஒரு ஊடகம் அவ்வளவுதான். இதனையெல்லாம் மறந்து நம் மக்கள், திரைப்படம் எனும் மாயையை யாரும் செய்யமுடியாத ஏதோ சாகச காட்சிகளைப் போல உணருகின்றனர். அது ஒரு கானல் நீர். அது ஒரு கற்பனை. அது ஒரு பொழுதுபோக்கு. கற்பனையை ,மாயையை , நிழலை நம்பும் மனிதர்களாக இவர்கள்? தன் அபிமான நடிகரின்மீது வெறிப்பிடித்து திரிகின்றனர். குருட்டுத் தனமாக அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களோ, இவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக, தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். இத்தகைய சூழல் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழலாகாது. நண்பர்களே கற்பனையிலிருந்து விலகி வாருங்கள். எதார்த்தத்தை நம்புங்கள். "2020-ல் இந்தியா ஒரு வல்லரசாகத் திகழும்" என்ற நம் குடியரசுத் தலைவரின் கனவு, இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. என் இனிய தோழர்களே! உண்மையாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கடமையினை எண்ணிப் பாருங்கள்.

திரைப்படங்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் அடிமையாகாதிர்கள். நாய்கள் அல்ல நீங்கள்! அவர்கள் போடும் கறித்துண்டிற்காக ஆசைப்படுவதற்கு. அனைத்தும் அறிந்த, பகுத்தறிவுமிக்க மனிதர்கள் நீங்கள். உங்களுக்கென்று ஒரு தனிப் பாணியை உருவாக்கிக் கொண்டு, இந்நாட்டிற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்காக உழையுங்கள். இந்தியாவை வல்லரசாக்குங்கள்.

என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது பத்திரிக்கைகளே. ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதே பத்திரிக்கைகள் தான். பத்திரிக்கைகள் நினைத்தால் நாட்டை எத்திசையிலும் திருப்பலாம். இவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ள பத்திரிக்கைகள் தங்களுடைய கடமையை மறந்து, சுயவிளம்பரத்திற்காக, வணிகத்தையே முதன்மையாகக் கொண்டு நடிகர்களை தேவையில்லாமல் அதிகமாக முன்னிலைப் படுத்துவது மிகுந்த வருத்தத்திற்குரியது.

இற்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் ஒரே தகவல்தொழில்நுட்ப ஊடகம் பத்திரிக்கைகள் தான். அத்தகைய பெருமைக்குரிய அவர்கள், தங்கள் கடமையினை உணர்ந்து, மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுடைய பங்கினை உணர்ந்து, செயல்பட்டால் இந்தியா 2020-ல் உறுதியாக வல்லரசாக மாறும். அதில் எவருக்கும் சந்தேகமிருக்காது.

ஒரு நாட்டின் முதுகெலும்பே பத்திரிக்கைகள் தான். அவர்கள் நினைத் தால், செயல்பட்டால் முடியாதது ஒன்றுமில்லை. பத்திரிக்கைகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது, இனியும் நடிகர், நடிகைகளுக்கு தேவையில்லாமல் முன்னிலைப்படுத்தாதிர்கள். அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்கிற நிலையில் மட்டுமே முன்னிலைப்படுத்துங்கள். அவர்கள்தான் இந்தியாவின் விடிவெள்ளி என்று முன்னிலைப்படுத்தாதிர்கள்.

எதனையுமே உடனடியாக நம்பிவிடும் இந்த மக்கள், பத்திரிக்கைகளால்(உங்களால்) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நீங்கள் முன்னிலைப்படுத்தும் நடிகர்களை நம்பி, இந்த மக்கள் பலமுறை ஏமாற்ற மடைந்துள்ளனர். இனியும் தொடரவேண்டாம் இந்த இழிநிலை. இந்தியாவின் வளர்ச்சியில் உங்கள் பங்கினை, கடமையினை உணர்ந்து செயல்படுங்கள்

உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!

ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை.

தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தனித்துவத்தில் சாதனை புரிந்து வெற்றி பெற்ற பின் அவனை ஓஹோ என்று போற்றுகிற சமூகம் அவனுடைய ஆரம்பகாலக் கட்டங்களில் அவனுக்கு உதவும் விதமாக இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. எத்தனையோ துறைகளில் தங்கள் தனித் திறமையால் முத்திரை பதித்தவர்கள் வாழ்க்கை சரிதத்தைப் படிக்கையில் நாம் இதை உணர முடியும்.

ஆனால் கடவுள் படைப்பில் எதுவுமே இன்னொன்றின் நகலாக இருப்பதில்லை என்பதே மகத்தான உண்மை. ஒரு பெற்றோருக்கு இலட்சக்கணக்கில் குழந்தைகள் பிறக்க முடிந்தால் கூட எதுவும் இன்னொன்றின் நகலாக இருக்க முடியாது என்று விஞ்ஞானம் சொல்கிறது. இறைவன் அவ்வளவு நுணுக்கமாக வேறுபடுத்திப் படைக்கும் மனிதனை ஒரே மாடலில் வார்த்து மாற்றி விட சமூகம் விடாமல் முயற்சி செய்வது ஆச்சரியமே அல்லவா?

ஆனால் சோகம் என்ன என்றால் இந்த சமூகத்தின் முயற்சி பெரும்பாலானவர்கள் விஷயத்தில் வெற்றி பெற்று விடுவது தான். ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித் திறமையோடு தான் படைக்கப்படுகிறான். அதை விருத்தி செய்து சாதிக்கவே அவன் இயல்பு அவனைத் தூண்டும். ஆனால் எத்தனை பேரால் தங்கள் அந்தராத்மாவின் குரலைக் கேட்க முடிகிறது? அதன்படி நடக்க முடிகிறது? சமூகம் தன் இரைச்சலால் அந்த சின்னக் குரலை மூழ்கடித்தல்லவா விடுகிறது.

"என்ன இந்தக் கோர்ஸா எடுத்திருக்கிறாய்? முடிச்சா என்ன சம்பாதிக்க முடியும். பேசாம பி.ஈ பண்ணா மாசம் குறைந்த பட்சம் ஐம்பதாயிரமாவது சம்பாதிக்கலாம்"

"என்ன எழுத்தாளராகணுமா? அவனவன் எழுதின பேப்பருக்கான செலவு கூட திருப்பிக் கிடைக்காம கஷ்டப்படறான். அதெல்லாம் விட்டுட்டு இப்படி செய்தா காலம் பூரா கஷ்டப்படாம இருக்கலாம்"

இப்படி எத்தனையோ லாஜிக்கான, மறுக்க முடியாத வாதங்கள். மாறுபட்டு நடக்கவும் விமரிசனங்களைத் தாங்கவும் முடியாமல் போகும் போது, இத்தனை பேர் சொல்வது தப்பாக இருக்க முடியுமா என்று குழப்பம் வரும் போது, நம்முள் ஒலிக்கும் குரல் நிஜமா, பிரமையா என்ற சுய சந்தேகம் வரும் போது பெரும்பாலானவர்கள் சமூகம் வார்க்கும் வார்ப்புகளாக, இயந்திரங்களாக மாறி விடுகிறார்கள். தங்களைத் தொலைத்துக் கொண்டு மற்ற நிழல்களின் நிழல்களாக வெறுமையாகக் கரைந்து போகிறார்கள்.

நீங்கள் நீங்களாக இருக்கும் வரை நிறைவைக் காண்பீர்கள். மற்றவர்களின் நகல்களாக மாற முயற்சிக்கும் போது இயற்கையில் இருந்து விலகி செயற்கையாக வாழத் துவங்கும் போது நிறைவு மறைய ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.

வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனை சந்திக்கும் போது கடவுள் "நீ ஏன் பில் கேட்ஸ் போல் ஆகவில்லை என்று கேட்கப் போவதில்லை. நீ ஏன் நீயாக வாழவில்லை? உன் வாழ்க்கை வாழத் தானே உன்னைப் படைத்தேன். நீ ஏன் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறாய்" என்று தான் கேட்கப்போகிறார். மாறாக மற்றவர்களின் நகல்களாக ஆக்கத் துடிப்பது சைத்தானின் வேலை. இதை நான் ஒரு கவிதையாக இன்னொரு பதிவில் தந்திருந்தேன்.

எனக்கென்று ஒரு வரம்

சாத்தான் நேரில் வந்தது
வரமொன்று கேள் என்றது
பொன்னும் பொருளும் போகங்களும்
போதிய வரை தர நின்றது
நான் நானாக வேண்டும்
எனக் கேட்டேன்.
நீ நீயானால் உன்னிடம்
எனக்கென்ன வேலை என்றது
ஏமாற்றத்துடன் சென்றது

எனவே உங்கள் உள்ளே ஒலிக்கும் குரலை உன்னிப்பாகக் கேளுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையாக உள்ள ஈடுபாடுகளை ஆராயுங்கள். இயற்கைக்கு ஒத்து கட்டுப்பாட்டுடன் வாழுங்கள். அடுத்தவர் செய்கிறார்களே என்று உங்களுக்கு ஒவ்வாத எதையும் செய்ய போகாதீர்கள். மற்றவர்கள் மெச்ச வேண்டுமென்று செயற்கையாக நடந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட வெட்கப்படாதீர்கள்.

திருபாய் அம்பானியும், நரசிம்ம மூர்த்தியும் தங்கள் துறையில் சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்திக் கொண்டார்கள், கொடி கட்டிப் பறந்தார்கள் என்று அவர்களைக் காப்பியடிக்க ஜேசுதாசும், குன்னக்குடி வைத்தியநாதனும் முயன்று இருந்தால் நாம் இரு துறைகளின் மேதைகளைப் பார்ப்பதற்கு பதிலாக இரு அனாமதேயங்களை அல்லவா பார்க்க வேண்டி இருந்திருக்கும்.

எனவே இந்தத் துறை தான் சிறந்தது, இந்த தொழில் தான் உயர்ந்தது, இந்த முறை தான் சரி என்று முன்கூட்டியே கணித்து உங்கள் மீது திணிக்க முனைபவர்களை அலட்சியம் செய்யுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள ஈர்ப்பும் திறமையும் எதன் மீது உள்ளதோ அதில் உங்களுக்கு இருக்கும் தனித் தன்மையோடு ஆர்வத்தோடு முனையுங்கள்.

மற்றவர்கள் சொல்வது எல்லாம் முட்டாள்தனம், அலட்சியப்படுத்துங்கள் என்று சொல்ல வரவில்லை. அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள். அவர்கள் அனுபவ அறிவின் வாக்குகளை சிந்தியுங்கள். ஆனால் முடிவு மட்டும் உங்களுடையதாக இருக்க வேண்டும். உங்கள் உண்மையான தேடலையும், குணாதிசயங்களையும் ஒட்டியே அமைய வேண்டும். அதுவே உங்களுக்கு நிறைவைக் கொடுக்கும்.

மற்றவர் வாழ்வில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர் வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெறுங்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் நகலாக வாழ்ந்து விடாதீர்கள்.

Francis Bacon எழுதிய வரிகளில் ஒன்று உலகப் புகழ் பெற்றது-"Character is Destiny". அதன் கூடவே வரும் இன்னொரு வாசகமும் அர்த்தம் பொதிந்த அருமையான உண்மை. - "Imitation is Suicide". இந்த வாசகத்தை நம் மனதில் பதித்துக் கொள்வது மிகவும் நல்லது. பிறரது நகல்களாக வாழ்வது தற்கொலை செய்து கொள்வது போன்றது.

முதலில் உங்களைக் கண்டறியுங்கள். மற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு உங்களை அமைதியாக ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே உங்களை நீங்கள் கண்டறிய முடியும். இல்லா விட்டால் மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொல்வதன் தொகுப்பையே "நாம்" என்று தவறான கணிப்பில் வாழ்ந்து விடுவீர்கள். உண்மையான உங்களைக் கண்டறிந்த பின், உள்ளே ஒலிக்கும் அந்தக் குரலைக் கேட்க ஆரம்பித்த பின் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரம்பியுங்கள். மற்றவர்கள் கண்களுக்கு அது சிறப்பென்று தோன்றாமல் இருக்கலாம். ஆனால் ஆத்ம திருப்தியை நீங்கள் உங்கள் வாழ்வில் உணர ஆரம்பிப்பீர்கள்.

உங்களைக் கண்டறிந்த பின் எக்காரணம் கொண்டும் உங்களைத் தொலைத்துக் கொள்ளாதீர்கள். அப்படித் தொலைத்து விட்டால் கூடவே வாழ்வின் எல்லா நன்மைகளையும் தொலைத்து விடுவீர்கள் என்பது மட்டுமல்ல, கடவுள் உங்களைப் படைத்ததன் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி வாழ்வை வீணடித்து விடுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

நன்றி:http://www.yarl.com/forum3/index.php?showtopic=49106