Tuesday, March 29, 2011

திருமணம் செய்ய என்ன என்ன தகுதிகள் வேண்டும்? ( IT துறையினருக்கு மட்டும்)

இந்தப் பதிவானது முற்றிலும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT Field) சார்ந்தது. மற்ற துறையினரின் அனுபவங்கள் எல்லாம் வழக்கமான சிக்கல்களை கொண்டது தான் என்பதால் அவற்றுக்குள் செல்ல வேண்டியது இல்லை. திருமணம் செய்ய என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது இன்றைய சூழ்நிலையில் மென்பொருள் துறையை சேர்ந்த ஆண் ஒருவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளில் இருந்து நாம் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தைக் காண்போம் அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகள்.

  1. நீங்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் ?

  2. எத்தனை ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள்?

  3. உங்களுடைய சம்பளம்?

  4. நீங்கள் பள்ளிக் கல்வியை எங்கு படித்தீர்கள் ?

  5. கல்லூரிக் கல்வியை எங்கு படித்தீர்கள்?

  6. உங்களது உயர்கல்வியை நீங்கள் முழு நேரப் படிப்பாக படித்தீர்களா அல்லது தொலைநிலைக் கல்வி வழியாகவா ?

  7. அந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமா ?

  8. பன்னாட்டு நிறுவனம் என்றால் வெளிநாட்டைத் தலைமையிடமாகக் கொண்டதா அல்லது இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டதா ?

  9. நீங்கள் எந்த துறை (domain) சார்ந்து பணி புரிகிறீர்கள்?

  10. நீங்கல் பணி புரிவது நிரலாளராகவா (developer) அல்லது தரக் கட்டுப்பாடா (tester)?

  11. நிரலாளர் என்றால் எந்த தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுகிறீர்கள் (Java or .Net or any others) ?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளைத் தவிர்த்து துறை சாராத மற்ற விடயங்களான சொத்து ,சாதகப் பொருத்தம், குலம்,கோத்திரம்,குடும்பம் இத்தியாதி இத்தியாதிகளும் கேட்கப் பட்டது. இத்தனைக்கும் கேள்வி கேட்டவரின் வயது முப்பதுக்கு மேல். இதைப் பார்க்கும்பொழுது இவர்கள் திருமணம் செய்யத்தான் இதை கேட்கிறார்களா அல்லது வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. அதவாது அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இரவில் குடை பிடிப்பான் என்ற முது மொழிக்கேற்பதான் இதைக் காணவேண்டியுள்ளது.


சமூகமானது நிலப் பிரபுவத்துவ மதிப்பீடுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி முதலாளித்துவ மதிப்பீடுகளுக்கு சென்றுகொண்டிருந்தாலும் அதை தங்களது வசதிக்கு ஏற்ப சிலதை ஏற்றுக் கொண்டும் சிலதை விட்டு விட்டும் தொடர்ந்து பண்பாட்டு முன்னகர்வில் செல்கிறது.


மேலைத்தேய நாடுகளைப் போல நிலப்பிரபுத்துவம் அதிலிருந்து உற்பத்தி சார்ந்து முதலாளித்துவம் என படிப் படியாக மாற்றம் நிகழாமல் நமது நாட்டில் சட்டென பெருவளர்ச்சி கண்ட பணித்துறையின்(Service Sector) காரணமாக நிலப்பிரபுத்துவத்தை வைத்துக்கொண்டே முதலாளித்துவத்துக்குள் நுழைந்ததால் இது போன்ற சிக்கல்கள் உருவாகின்றன.





இது மென்பொருள் துறையைப் பொறுத்த அளவில் திடீரென எட்டு கால் பாய்ச்சலில் சென்று முழுக்க மாறிவிட்டதை போன்று ஒரு மெய்நிகர் தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் சமூகம் அந்த அளவு முதிர்ச்சி அடையவில்லை அதற்கு இந்த கேள்விகளைக் கேட்டவரின் வயதே சான்று. அதாவது அவரிடம் என்ன தகுதி பொருளாதாரம்,வேலை இருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள ஒரு சராசரி ஆணின் நிலப் பிரபுத்துவ மனம் ஒப்பவில்லை. இது போன்ற தகுதிகளைக் கொண்ட எனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது (சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம், சிறிய வயதிலேயே அவர் மேலாளராகி விட்டார்) அவர் சொன்னது எனக்கு வரும் மனைவி வேலைக்கு செல்ல கூடாது என்றார்.



இது கேள்விகளைக் கேட்ட அந்தப் பெண்ணின் அளவுகோலுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. தன்னைவிட தகுதி குறைந்த சம்பளம் குறைவாக வாங்கும் ஆணை எந்தப் பெண்ணுமே அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அந்த அளவு தகுதி உள்ள ஆண் அதற்கு நேர் எதிராக சிந்திக்கிறார்.(நான் வாங்கும் சம்பளமே போதும் எனக்கு துணையாக வருபவர் வீட்டில் இருந்தால் போதும்) .


பெண்களின் இந்த எதிர்பார்ப்புகளை தவறென்றும் சொல்லவில்லை அவர்கள் வேலைக்கு சென்று பெரிதாக சம்பாதித்தாலும் சமூகமும் உடனே மாறி விடாது இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் சமூக மாற்றங்களை உருவாக்க முடியாது.அவர்களை மதிக்க வேண்டும் சமமாக நடத்த வேண்டும் என்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை.


ஆனாலும் பரந்த சிந்தனை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் இவர்களின் சாதி அல்லாமால் வேறு ஏதானும் சாதியில் இருப்பார்கள். அதாவது முன்னாடி சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் நிலை (deadlock situation). (எல்லோராலும் காதலிக்கவும் முடிவதில்லை :))



சரி இதற்கு என்ன தான் தீர்வு? முதலில் இந்த சமூகத்தைப் பற்றி தெளிவான பார்வை வர வேண்டும் பின்னர் அந்தப் பார்வையில் நமது மதிப்பீடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும். ஒரு ஆழ்ந்த புரிதல், விட்டுக் கொடுத்தல், திருமணம் செய்ய அவர் பணிபுரியும் தொழில்நுட்பப் பிரிவுகளை கேட்பது போன்ற முட்டாள் தனமான நடவடிக்கைகளை கைவிடுதல் போன்ற பல "தல்" களின் மூலம் இது முடிவுக்கு வரலாம். ஆனால் மேற் சொன்னதைப் போன்றே அந்த அளவு பக்குவம் வர நீண்ட காலம் பிடிக்கலாம். உங்களது கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்



No comments:

Post a Comment