Sunday, December 13, 2009

மற்றுமொரு கவிதை…

நட்சத்திரங்களற்ற இரவில்
நிச்சலனமான ஆகாயமாய்ப்
பெருகும்
ஒற்றைக் கண்ணீர்த்துளி.
ரயில் பயணங்களில்
தண்டவாள ஒலிகளுடன்
ஒத்திசைந்து கிளர்த்தும்
என் ஆனந்தமான தனிமை.

நான் எழுத விரும்புகிறேன்
பின்னிரவின் அடர்ந்த கருமையிலோ
புலர்பொழுதின் வாத்ஸல்யமான கதகதப்பிலோ

துவேஷங்களற்ற என் கண்ணீர்த்துளி பற்றி
வாதைகளற்ற என் தனிமை பற்றி.

என்னிடம் எந்தப் புகாரும் இல்லை.

என் தனிமை மிகப் பிரத்யேகமானது,
எனது கண்ணீர்த்துளி போலவே.
அதற்கென்று ஒரு வாசமுண்டு,
ஒரு மொழியும்கூட.
சிறகுகளையத்த சுதந்திரத்தை
அது எனக்குத் தருகிறது.

ரகசியங்களாய்ப் பூத்திருக்கும் இந்தப்
பிரபஞ்சத்தில் என் தனிமை
ஆகக் கடைசி ரகசியம்,
என் கண்ணீர்த்துளி போலவே.

இந்த இரவில்
புலப்படாத தொலைவுகளில்
கண்ணீர்த்துளியாய் என் தனிமையும்
தொட முடியாத ஆழங்களில்
தனிமையாய் என் கண்ணீர்த்துளியும்
பிரம்மாண்டமாய் இடம் மாறிக்கொண்டிருக்கின்றன.

பிறகொரு நாள்,
நான் எழுதுவேன்,
துயரக்கனவொன்றின் சாயல்
படிந்திருக்கும்
இந்த இரவு பற்றி.

--கவிதா முரளிதரன்

பிரியம்

• நிலவின்
ரகசிய முகமும்
ராட்சச முகமும்
கடந்து
ஒளியின் ஓராயிரம்
மின்னல்களின் மடியில்
தவழ்ந்து கெண்டிருக்கிறது
எனது தேவதையின்
முதல் புன்னகையின் தரிசனம்.

• மீண்டும் முளைக்காத
முளைக்கவும் முடியாத
வண்ணத்துப் பூச்சிகள்
மின்னலென மறைந்த கணத்தின்
நினைவுகள்
எனைக் கிளர்த்திக் கிளர்த்தி
போதையூட்டுகின்றன.

• நான்
நுழைந்து கொண்ட பின்பு
தாமாகப் பூட்டிக்கொண்டு
எங்கோ ஒளிந்துகொண்டு விட்டன
சொற்களாளான இவ்வறையின் கதவுகள்.

• ஒரு
பனித்துளியிடம்
புகுந்துகொண்ட
என் உலகம்
தன்
சூரியனைத் தொலைத்துவிட்டுச்
சுற்றிக்கொண்டிருக்கிறது
வெறும் இருள் குகையாய்.

--agiilan

சலிப்பு

யாரும் புரிந்து கொள்ளவியலா?
ஜடமாகவே இருந்துவிடுகிறேன்
நான்……

காலம்
என் கைகளில்
திணித்துப்போன…
நிறமற்ற கனவுகள்…
எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…

தேவதைகள்
யாருமற்ற எனது நிலத்தில்
சருகுற்று…
பேய்கள் வசிக்கட்டும்….

எப்போதேனும்…
கொலுசுகளோடு
வரும்
யாரோ ஒருத்தி
கண்டெடுக்கக் கூடும்…
சருகுகளினடியில்….
சிக்குண்டு போன…
யாரும்படிக்காத…
எனது புத்தகத்தின்…
இறுதிப் பக்கங்களை…..

--agiilan

agiilan.com

ஒரு நேசத்தின் மிச்சம் .

மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்

உன் வன்மங்களை அறியத் துணியவில்லை

நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்

தேவதையென்றே புலம்புகின்றன

நிகழ்வுகள் அறியா உதடுகள்

கடவுச்சொற்கள் முதல்

அறையின் அலங்காரங்கள் வரையென

நிறைத்து வைத்திருக்குமென் காதலில்

இன்னும் கொஞ்சம் உயிர்

இருக்கத்தான் செய்கிறது..

இக்கடுங்குளிர்காலம் தாண்டியொரு கோடையில்

உனையேந்திய கடவுச்சொற்கள் போன்றே

காலாவதியாகியிருக்கலாம்

என் காதலும்..

--கோகுலன்

gokulankannan@gmail.com

மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-தந்தை பெரியார்

கடற்பறவையின் தொழுகை

ஒவ்வொரு சமாதியின்

தலைமாட்டிலும் காலடியிலும்

கொப்பும் துளிரும் விட்ட

மஞ்சனாத்திமரங்கள்

இறப்பின் தருணங்களிலிருந்து

உயிர்ப்பிக்க எத்தனிக்கும்

காலம் மறநத சொல் ஒன்றை

தேடிக் கொண்டிருக்க

இலைகளில் படர்ந்த

வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது.

வராத தேவதை ஒன்றிற்காக

யாருமற்ற மணல் வெளியில் நின்று

நிரம்பவும் யாசித்து

கலுங்குப்பள்ளியின்

மினரா உச்சியில்

ஒளிநிரப்பிக் கொண்டிருந்த சுடர்

அலைகளின் நிழலில்

நீக்கமறக் கலந்து

பொழுதெல்லாம் காத்திருக்கிறது

கடலில் மிகவும் நீளமான பாய்விரித்து

திசையற்ற தொழுகையை

முடிக்க இயலாமல் கடற்பறவை

--ஹெச்.ஜி.ரசூல்

வாழ்க்கைக் கண்ணாடியில்

வாழ்க்கைக் கண்ணாடியில்/
முகம் பார்த்து/
தலை சீவி/ பவுடர் பூசி/
வெளிக் கிளம்பினேன்/

பஸ் ஸ்டாண்டில்/
என்னைப் போலவே/
ஆண்களும் பெண்களும்/

அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/
முகம் பார்த்து/ அலங்கரித்து/
காத்து நின்றிருந்தனர்/

வந்து போய்க்கொண்டிருந்த/
வாகனங்களில்/ பொதுமக்கள்/
வேற்றுமை காண இயலாவண்ணம்/

உட்கார்ந்து கொண்டும்/
நகர்ந்துகொண்டும்/
பயணம் செய்துகொண்டிருந்தனர்/

என்னுடைய வாகனம் வந்துவிட்டது/
இடிபாடுகளுக்கிடையே/ நானும்/
ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/

எங்கோ ஒரு இடத்தில்/
நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/
ஒரு பூ கீழே தவழ்ந்தது.

---ஆத்மாநாம்

குட்டி இளவரசி வந்துவிட்டாள்..!!

டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/

சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/

கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/

மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/

ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/

பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/

பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/

தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/

ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/

பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/

அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.

---ஆத்மநாம்

வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?

என் வனம் என்னிடம்..

தலைவன்களும் பல்லக்கத்தூக்கிகளுமாய்
ஊர்வலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊரிலிருந்து
இவ்வனத்திற்குள் வந்து நாட்கள் பலவாகியிருந்தன

வனம் நிறையப்புற்களோடும் கொஞ்சம் மான்களோடும்
அழகாயிருந்தது.
தேன்சொரிந்தாலும் காய்கனிந்தாலும் வந்துபோக
பட்டாம்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும்
அங்கே சுதந்திரம் இருந்தது.

இயற்கையின்மொழி இதயமெங்கும்
கவிதைகளை நிறைத்துக்கொண்டிருந்தபொழுதில்
அவன் தயங்கித் தயங்கி வந்து நின்று
தானுமொரு வனம்விரும்பி என்றான்
வனம்விரும்பிகளின் ரட்சகன் என்றான்
மொழிக்காதலனுமென்றான்
நான் வனம் நிறைத்திருந்த கவிதைகளை
அவனுக்குச் சொல்லலானேன்
பூக்களில் தேன் சொரிந்திருந்தும்
அன்று பட்டாம்பூச்சிகள் வருகையை நிறுத்திக்கொண்டன

தன்பரப்பில் வாழும் உயிர்களுக்கான
வனச்சுனையின் பேதமற்ற நீரளிப்பை
நெக்குருகிச் சொல்லிக்கொண்டிருந்தபோது
தலையைச் சிலுப்பிக்கொண்டே
"இப்படித்தான் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்
அல்லது பேசிக்கொண்டிருப்பதே நம் பண்பாடு"
தன் அபிமான நடிகன்கூட
ஒருபடத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என்றான்
பறவைகள் அக்கணம்
வனத்திற்கெதிரான திசையில் பயணிக்கக் கண்டேன்

தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்
கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்
நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்
உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட
பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்
கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்
சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்
முகில்களோ, மான்களோ எதுவும்
தட்டுப்படாத வெறுமை சூழந்தது

அவனுடனான உரையாடலில்
என் சொற்கள் தீர்ந்துபோன சமயத்திலும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்
தான் இச்சமூகத்துக்கு
ஏதேனும் செய்தே தீருவேன் என்றான்
கலைரசிகர்கள்
வனம்வாழ்வது தகாதென்றான்
இலக்கியம், கலை, மொழிபரப்புதலில்
தானொரு தலைவனாவதற்கு
ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்
தன்பின்னே வந்தால் எதிர்காலம் சிறக்குமென்றும்
தன்னைச் சுமப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானவனென்றும்
இடைவெளிகளற்றுப் பேசிக்கொண்டேயிருந்தான்


மௌனத்தை மொழிபெயர்க்கத் தெரியாதவன்
பதிலுக்கு நச்சரித்தபோது நான்
நோய்க்கூறுகள் உருவானது இப்படித்தானென்றேன்
அவன் கோபம் கொப்பளிக்க என்னை
ஒரு சமூகத்துரோகியென முடிவுசொல்லி விடைபெற்றிருந்தான்
ஒரு நீள இரவு கடந்து
விழித்துக்கொள்கையில்
மழைபெய்திருந்தது
மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன
என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது

பெங்களூரு நாட்குறிப்புகள் ....!

இந்த நீண்ட மழைக்காலம் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது .

ஒற்றனைப் போல ரகசியமாக வந்து செல்கிறது மழை.

இதில் பகலெனப் படுவது
அலுவலகக் கணினிக்கான காலமாக இருக்கிறது

இரவெனப் படுவது வீட்டுக் கணினிக்கு உரியது

இங்கு தெருவானது ஒரு வாசலில் தொடங்கி
இன்னொரு வாசலிலேயே முடிந்து விடுகிறது.

இதில் வாழ்வெனப் படுவது சுழலும்
ஓர் வெற்றுக் கனவு..!
படகில்
நீரில் அலையும் ஈரக்கால்கள்

பசியால் மங்கும் முகங்கள்

அவளுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலாக
என் இதயம்

அவள் கண்களிலிருந்தும்

அவள் கைகளிலிருந்தும்

என்னைப் பிரித்தது எது

துயரத்தை கண்ணீர் மறைக்க

பெய்யும் மழைக்கும்

ஜன்னலுக்கும் அப்பால்

அவள் நிற்கிறாள்

'இரு, நானும் உன்னுடன் வருகிறேன்' என்று
சொல்ல முடியாமல்.
----ஓட்டிரோ சில்வா
வெனிசூலாவை சேர்ந்த இடதுசாரிக் கவிஞர்

உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்..!

"உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ...
சமாதியோ... மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது..."

----வி.என்.ஃபிக்னர்

கடவுளர்களின் அலுவலகம்













வேலை முடிந்த நாளொன்றின்
களைத்துப் போன
புறநகர் ரயில் பயணமொன்றில்
விழிப்பிற்கும் உறக்கத்திற்கும்
இடையேயான கனவொன்றிலிருந்து
பலவந்தமாய் மீள வேண்டியிருந்தது
தொங்குங் கம்பியைத்
தொலைத்து விடாமலிருக்க ..

தூக்கம் துரத்த
ஏதாவது யோசித்திருக்க
சிக்கினார்
அன்றும் கடவுள் கைகளிலே ..

எத்தனை வேலைக ளவருக்கு
சொந்தத் தொழிலா
சம்பளமுண்டா
உயரதிகாரிக்கு பயப்படுவாரா
தான் வருமுன்னே
வந்துவிடக் கூடாதவரென
வேண்டியதுண்டா
விடுப்புக்கு விண்ணப்பிப்பாரா
பயணத்திற்கு மூன்று மாதம் முன்பே
பதிந்து வைப்பாரா
ஊதிய உயர்விற்கு
சண்டை போடுவாரா

பதில் தெரியாத
தொடர் கேள்விகளின் முடிவில்
அவர் ஒருவர் தானா
இல்லையெனில் எங்கிருக்கிறது
கடவுள்களின் அலுவலகம்
புதிய கேள்விகள்
நிறுத்தத்தில் நின்றன .

ஒரு நாளின்
எட்டு மணி நேரம் மட்டுமே
நான் செய்யும்
கூட்டல் கழித்தலிற்கே
சுளுக்கிக் கொள்ள

பல நூறாண்டுகள் தாண்டியும்
படைத்துச் சலிக்க
ஒருவரல்ல கடவுள்
பெயர்களெழுத
பயணச் சீட்டின்
பின்பக்கமாவது தாண்டும்

எனக்குத் தெரிந்த
கடவுளர்களின் பெயர் பற்றி
யோசித்துக் கொண்டே
நிலையம் தாண்டும்
மந்தையினூடே ஊர்கையில்
சாலையோரம் படுத்த படி
பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்
பெயர் சொல்ல விரும்பாத
ஒரு கடவுள்

--Rejovasan

Rejovasan.com

பெருந்துயரின் பேரலை

அன்புமயமாக

நீ எழுதிக் கொண்டிருந்த கவிதையை

பாதியிலேயே நிறுத்திவிட்டு

பறந்து போய்விட்டாய்

ஒரு பட்டாம்பூச்சியைப் போல.

வார்த்தை பேச்சு எழுத்து

எதிலும் அடக்கிச் சொல்லமுடியாத

பெருந்துயரம் பேரலையாய் எழுந்து

இதயத்தை முட்டித் தள்ளுகிறது.

ஆறுதல் கொள்வதற்கு

திரும்பவும் உன் பெயரை

உச்சரித்துக் கொள்கிறேன்

கண்மணிகளைக் காப்பாற்றிக் கொண்டிருந்த

இமையொன்று உதிர்ந்து வீழ்ந்தது.

கண்ணீர் சிந்த சக்தியற்று

சப்தநாடியும் உறைந்து போக

அழுதுபுரண்டெழும் ஞாபகம்

உன் முகமும் உன் மனசும்

உயிரைத் தாண்டிவந்து

என்னோடு பேசிக் கொண்டிருக்கிறது.

-- ஹெச்.ஜி.ரசூல்
mylanchirazool@yahoo.co.in

போர் ரசிகன்...

போர் பற்றிய
மிக சமீபத்திய
செய்திக்காகக்
காத்திருக்கிறேன்

என் வான்வெளியில் அல்ல
விமானங்கள் சீறுவது
என் தெருவில் அல்ல
குண்டுகள் விழுவது
நொறுங்கித் தரைமட்டமாவது
என் வீடுமல்ல

அகண்ட இப்பிரபஞ்ஞத்தில்
கவனமாய்க் கறாராய்
வகுக்கப்பட்ட
எல்லைகளினுள்
அபாயங்களுக்குத் தப்பி
அரண் கொண்டிருக்கிறது
என் இருப்பு
என் கோப்பைத் தேநீருடன்
என் இருக்கையில்
ஓய்வாய் அமர்ந்து
தினசரியின் ஒரு வரியை
சாதாரணமாய்க் கடந்து விடுகிறேன்

அவ்வரியில் குண்டடிபட்டு
சில நூறுபேர்
இறந்திருக்கிறார்கள்
எந்த நியாயமுமின்றி
ஒரு குழந்தை தகப்பனையோ
சிசுவொன்று முலையூட்டும் தாயையோ
இழந்துவிட்டிருக்கிறது

யாரோ ஒருவர்
சகோதரனையோ
கணவனையோ
பிள்ளையையோ
இழந்து கதறுகிறார்

நாடகமென போர் நிகழும்
ஊடகங்களின்
அபிமான ரசிகன் நான்

மயக்கும் வண்ணத்திலும்
வாசனையிலும்
பெருகி வழிகின்றன
போர்ச் செய்திகள்

சிதறும் தசையும்
ஒழுகும் ரத்தமும்
இடையறாது ஆர்வமூட்ட
அடுத்த அங்கம் எதுவோயென
ஆவல் கொள்கிறேன்

மரவள்ளிக் கிழங்குகளைத்
தோண்டியெடுப்பது போல்
மண்ணிலிருந்து தன் குழந்தைகளின்
உடல்களைத் தோண்டியெடுக்கிறான்
ஒருவன்

தன் அம்மண மேனியில்
குண்டு சிதறிய காயங்களோடு
அழுதுகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை

போர்ச்சிதிலங்கள் மீது
விளையாடுகின்றனர்
இன்றைய தினத்துக்குத்
தப்பிவிட்ட சிறுவர்கள்

குண்டுகளை விசிறிச் செல்கிறது விமானம்
புகையெழும்பி மூடுகிறது
தொலைக்காட்சித் திரையை

இன்று கொல்லப்பட்டவர்கள்
எண்ணிக்கையைச் சொல்லி
செய்தி வாசிப்பவன் முடிக்கையில்
என் கடைசி மிடறு
தேநீரை உறிஞ்சுகிறேன்

இனிப்பாயும் இருக்கிறது
ரத்தத்தின் சுவை

(‘பிஷப்புகளின் ராணி’ தொகுப்பிலிருந்து)


இயலாமையின் தொலைவிலிருந்தபடி,
போரால் இன்னலுறும் எம் ஈழத் தமிழ்ச் சோதரர்களுக்கு....

வாழும்படிதான் இருக்கிறது வாழ்க்கை.

ஓடிக்கொண்டேயிருக்கிற நதி
போய்க்கொண்டேயிருக்கிற மேகம்
தினம் பூக்கிற மரம்
பறந்து திரிகிற வண்ணத்துப்பூச்சி
குரலெழும்பாமல் இசைக்கிற காற்று
வீடு முழுக்க வானம்
வானம் நிறைய பறவைகள்
அருகே, மிக அருகே
தொட்டுக்கொள்ளும் தூரத்தில்
என்றில்லாவிடினும்
என் குரல் கேட்கிற தொலைவில் நீ
இது போதும்,
இவை போதும்
வாழும்படிதான் இருக்கிறது -
வாழ்க்கை.

இது இப்படித்தான் இருக்கும் என்கிறது அன்பு. .....

இது
தேவையற்றது
நேரத்தை
வீணடிப்பது
என்கிறது
அறிவு

இது
இப்படித்தான் இருக்கும்
என்கிறது
அன்பு

ஏமாற்றங்களின்
மாயாஜாலம்
இது
நம்பமுடியாதது
என்கிறது
தீர்வு

இது
துன்பங்களின்
பதுங்குகுழி
சித்திரவதைகளின்
முகாம்
என்கிறது
பயம்..

இது
பார்வையற்ற
பார்வை
என்கிறது
விழிப்பு

இது
இப்படித்தான் இருக்கும்
என்கிறது
அன்பு

இது
சின்னத்தனமானது
நிஜமற்றது
என்கிறது
சுயம்

இது
இலகுவானதல்ல
நெருப்பில்
நடனம்
என்கிறது
எச்சரிக்கை

இது
ஆபத்தானது
சுயத்தைக்
கொல்வது
என்கிறது
அனுபவம்

இது
இப்படித்தான் இருக்கும்
என்கிறது
அன்பு.
.....

வ‌ன்னிப் ப‌டுகொலைக‌ளுக்குப் பின்ன‌ர் இல‌க்கிய‌த்துக்கான‌ சாத்திய‌ம் இருக்கிற‌தா..?

இப்பொழுது வ‌ன்னியில் ந‌டைபெறும் இன‌ப்ப‌டுகொலையான‌து ஜெர்ம‌னியின் ஆஷ்விட்சுக்கு இணையான‌ ஒரு நிக‌ழ்வாக‌வே தோன்றுகிற‌து.

நாள‌ந்த‌ம் இணைய‌த்த‌ள‌ங்க‌ளின் வாயிலாக‌ செய்திக‌ளைக் க‌ண்டு குற்ற‌ உண‌ர்வுக‌ளால் மூழ்க‌டிக்க‌ப்ப‌டுகிறோம்.இந்த‌ குற்ற‌ உண‌ர்வின் எல்லையாக‌ த‌ற்கொலைக‌ள் இருக்கின்ற‌ன‌.

இதை விவ‌ரிக்க‌ வார்த்தைக‌ளோ,க‌விதையோ வேறு எந்த‌ இல‌க்கிய‌ வ‌டிவ‌மோ ஏன் மொழியே கூட‌ ச‌க்திய‌ற்றுப்போய் விடுகிற‌தாக‌வே உண‌ருகிறேன்.

பேர‌ழிவு இல‌க்கிய‌ம்(Holocaust literature) என்ற‌ வ‌கையில் ஆஷ்விட்சில் சிக்கிய‌ யூத‌ர்க‌ளால் ப‌டைக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌.அவ‌ர்க‌ளாவ‌து இர‌ண்டாவ‌து உல‌க‌ப்போரின் முடிவில் விடுவிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் ஆனால் வ‌ன்னி த‌மிழ‌ர்க‌ளுக்கு விடுத‌லை என்ற‌ ஒன்று சாத்திய‌மா என்ற‌ அச்ச‌ம் ம‌ன‌தில் ப‌ர‌வுகிற‌து

அப்ப‌டியான‌ சாத்திய‌த்துக்கு முன்பே அங்கே யாரேனும் உயிரோடு மிஞ்சுவார்க‌ளோ என்ப‌தே ச‌ந்தேக‌ம் தான்.

வ‌ன்னியில் இற‌ப்ப‌து ம‌னித‌ன் ம‌ட்டும‌ல்ல‌ ம‌னித‌ன் என்ற‌ க‌ருத்தாக்க‌மும் தான்.

தீக்குளிக்கும் முன்பு முத்துக்குமார் அளித்த மரண வாக்குமூலம் - முழு விவரம்

சென்னை: தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது.

முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.

அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.

தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?

கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).

பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.

உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.

என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?

சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.

ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.

தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.


அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.

ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.

சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.

ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?

புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?

தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.

ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.

ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.

அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99.

அறிந்த நிரந்தரம்

ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.
இரவெனும் கருப்புச் சூரியன்
வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.
நெட்டித் தள்ளியும் நகராத காலம்
எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.
இதோ வந்தது முடிவென்ற
சாமச் சேவலின் கூவல்
ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.
இரண்டாம் தஞ்சம்
பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.
நாதியற்றுப்போன நாரைகள்
கால்நடைகளின் காலசைப்பில்
கண் வைத்துக் காத்திருக்கும்.
எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?
தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த
மனிதன் ஒருவன்
ஒட்டடை படிந்த தலையுடன்
வாசல் திறந்து வருகிறான்
கோதும் விரல்களிடம்.
காயும் நிலவிலும் கிராமக் குடிசை
இருள் மூலைகள் வைத்திருக்கும்
மறக்காமல்
மின்மினிக்கு.
வாழும் பிரமைகள்
காலம் அழிந்து
கிடந்த நிலையில்
கடல் வந்து போயிருக்கிறது.
கொடிக்கம்பியும் அலமாரியும்
அம்மணமாய்ப் பார்த்து நிற்க
வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.
நினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும்
காற்றில் கரைந்துவிட
வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.
பெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள்
மறந்த மனதின்
இருண்ட மூலைகளினின்று
வெளிப்பட்டு
உடல் தேடி அலைவதால்
எங்கும் துணியின் சரசரப்பு.
அன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா
தசைகளின் சுடரை
நகல் எடுக்க முயன்று
கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.
இறந்த நாள்களின்
குளிர் நீளக் கைகள்
நீண்டு வந்து
மறதியைக் கொண்டு தூர்த்துவிட
கற்பனைக்கும் சொந்தமில்லை
கோலங்கள்.

---shibli

ரசிகர்மன்றங்கள் - முட்டாள்களின் கூடாரம்

அறிமுகமில்லாத, முகவரிதெரியாத பல திரைப்பட நடிகை, நடிகர்களின் புகைப்படங்களை இன்றைய இளைஞர்களில் 100-க்கு 75% பேர் தம்முடைய பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டுள்ளனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் இத்தகைய கேவலத்தை தொடருகின்றனர். யார் அவர்கள்? அவர்களின் சிறப்புத்தகுதிகள் என்ன? அவர்கள் நம்மிடமிருந்து எவ்வித்தில் வேறுபடுகின்றனர்? இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்திற்கும் பதில் "பெரிதாக ஒன்றுமில்லை" என்பதாகத் தான் இருக்கும். அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே தவிர! ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. ஆம்!!! இத்தகைய கற்பனையில்தாம் இன்றைய இளைஞர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கிறது போலும் அவர்களைப்பற்றி!?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைப் போல அவர்களுக்கும் 'நடிப்பு' ஒரு தொழில் அவ்வளவு தான். இதை மறந்து நம்மவர்கள் அவர்களைப் பற்றி ஏதோ பெரிய தலைவர்களைப் போல் கற்பனை செய்துகொண்டு பைத்தியக்காரணத்தனமாக அவர்களை பின்பற்றுவது மிகவும் வெட்கத்திற்கு உரியது.

அனைத்து ஊர்களிலும் எங்கு காணினும் பல நடிகர்களின் ரசிகர் மன்றப் பலாகைகள். இவர்களின் தொழில் என்ன? ஏதேனும், அந்த நடிகரின் புது திரைப்படம் வெளிவந்தால் கட்-அவுட் வைப்பது, பத்திரிக்கை அடித்து விளம்பரப்படுத்துவது........... இல்லையெனில், எப்போதாவது இரத்ததானம், கண்தானம் போன்றவற்றைச் செய்வது(எவருடைய பெயரையோச் சொல்லி?). அவர்களின் பல நடவடிக்கைகள் தேவையில்லாதவனவாகவும், சில (இரத்ததானம், கண்தானம் ) பாராட்டுக்குரியதாகவும் உள்ளன. இருப்பினும் அனைத்து ரசிகர் மன்றங்களும் இத்தகைய இரத்ததானம், கண்தானம் போன்றவற்றில் ஈடுபடுவது கிடையாது. சில மட்டும்தான். மற்றவை அனைத்தும் வேண்டாத வெட்டி விளம்பரத்திற்காகத் செயல்படுகின்றன என்பது மறுத்தற்கியாலாத ஒன்று.

இவர்களின் நடவடிக்கைகளை ஆழ்ந்து நோக்கின் அத்தனையும் வெறும் விளம்பரத்திற்காக, விளம்பரத்திற்காக மட்டுமே. தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே. அதேசமயம் இவர்களில் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தமக்குப் பிடித்த நடிகர்களின் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு சுயமாக சிந்திக்கத் தெரிந்த மனிதனும் இத்தகைய இழிச்செயலை செய்ய மாட்டான். மீறியும் கொண்டாடுபவர்களை சுயபுத்தியில்லாதவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும். தம் பெற்றோரின் பிறந்த நாள் (அ) திருமண நாள் கூட இவர்களுக்குத் தெரிந்திருக்காது.உங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்?....

உங்கள் பெற்றோரிடம் நீங்கள் ஆசையாக பேசியதுண்டா? உங்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டதுண்டா? உங்களையே நம்பிவந்த மனைவிக்கும், உங்களின் பாசத்தை, அரவணைப்பை என்றும் எதிர்பார்க்கும் குழந்தகளிடம் நட்பாக நடந்துகொண்டதுண்டா?உங்களில் எத்தனை பேர் மேற்கூறியவற்றுக்கு "ஆம்" என்று பதிலளிக்க முடியும்? அறிமுகமில்லாத ஒருவருக்காக, தொடர்பே இல்லாத ஒருவருக்காக நீங்கள் எதற்காக இவ்வளவு பணத்தை வெட்டியாய் வீண்செலவு செய்கிறீர்கள். அதனால் நீங்கள் அடைந்த லாபம்தான் என்ன? உங்களுக்கு அதனால் சிறிதளவேனும் மகிழ்ச்சி கிடைத்ததா நிரந்தரமாக எண்ணிப்பார்க்கும் அளவுக்கு!!! இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களோ அவர்களுக்காக மண்சோறு சாப்பிடுகின்றீர்கள். என்னவென்று சொல்வது உங்களைப் பற்றி?

உங்களைச் சுற்றி ஆயிரமாயிரம் பேர் வறுமையில் வாடி, வறுமையின் விளிம்பில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக நீங்கள் ஏதேனும் செய்ததுண்டா?(Atleast) அவர்கள் மீது இரக்கப்பட்டதாவதுண்டா?

யார் அந்த நடிகர்கள்? உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு, தொடர்பு? உங்களுக்காக அவர் என்ன செய்துள்ளார்? இதுவரை வந்த நடிகர்களும், இனி வரப்போகும் நடிகர்களும் இந்த மக்களின் முட்டாள்தனத்தை தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, அனைவரின் முகத்திலும் கரியைப் பூசிவிடுகின்றனர். இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்காது என நினைக்கிறேன். காரணம், உண்மை அதுதான்.

விளம்பர நோக்கில்லாமல், தன்னலம் கருதாமல், யாரையும் மிகைப் படுத்தாமல் மக்களின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு ரசிகர் மன்றம் செயல்படுகிறதா எனில், இந்தியா ஒன்று கூட கிடையாது. எத்தனை மாமேதைகள், தலைவர்கள் தங்களுடைய சுகதுக்கங்களை துறந்து, தம் பெற்றோர்,மனைவி, மக்கள் என எல்லோரையும் இழந்து, நாட்டிற்காக அரும்பாடுபட்டு, இரத்தம் சிந்தி, தம் இன்னுயிரையும் ஈந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு இங்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன? ஏன் அவர்களைப் பற்றிய சிறிய செய்திகளாவது தெரியுமா இவர்களுக்கு? அத்தனை உயர்ந்த தலைவர்களை மறந்துவிட்டு சிறுபிள்ளைத் தனமாக இவர்களின் பின்னால் செம்மறியாட்டு மந்தைப் போல தொடருவது எவ்வளவு கேவலத்துக்குரியது. மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அத்தகையப் பணியை தொடருவர்.

திரைப்படம் என்பது என்ன? அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் அவ்வளவுதான். இல்லையெனில் எப்போதாவது அரிதாக ஏதேனும் செய்தியைத் தரும் ஒரு ஊடகம் அவ்வளவுதான். இதனையெல்லாம் மறந்து நம் மக்கள், திரைப்படம் எனும் மாயையை யாரும் செய்யமுடியாத ஏதோ சாகச காட்சிகளைப் போல உணருகின்றனர். அது ஒரு கானல் நீர். அது ஒரு கற்பனை. அது ஒரு பொழுதுபோக்கு. கற்பனையை ,மாயையை , நிழலை நம்பும் மனிதர்களாக இவர்கள்? தன் அபிமான நடிகரின்மீது வெறிப்பிடித்து திரிகின்றனர். குருட்டுத் தனமாக அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களோ, இவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக, தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். இத்தகைய சூழல் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழலாகாது. நண்பர்களே கற்பனையிலிருந்து விலகி வாருங்கள். எதார்த்தத்தை நம்புங்கள். "2020-ல் இந்தியா ஒரு வல்லரசாகத் திகழும்" என்ற நம் குடியரசுத் தலைவரின் கனவு, இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. என் இனிய தோழர்களே! உண்மையாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கடமையினை எண்ணிப் பாருங்கள்.

திரைப்படங்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் அடிமையாகாதிர்கள். நாய்கள் அல்ல நீங்கள்! அவர்கள் போடும் கறித்துண்டிற்காக ஆசைப்படுவதற்கு. அனைத்தும் அறிந்த, பகுத்தறிவுமிக்க மனிதர்கள் நீங்கள். உங்களுக்கென்று ஒரு தனிப் பாணியை உருவாக்கிக் கொண்டு, இந்நாட்டிற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்காக உழையுங்கள். இந்தியாவை வல்லரசாக்குங்கள்.

என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது பத்திரிக்கைகளே. ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதே பத்திரிக்கைகள் தான். பத்திரிக்கைகள் நினைத்தால் நாட்டை எத்திசையிலும் திருப்பலாம். இவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ள பத்திரிக்கைகள் தங்களுடைய கடமையை மறந்து, சுயவிளம்பரத்திற்காக, வணிகத்தையே முதன்மையாகக் கொண்டு நடிகர்களை தேவையில்லாமல் அதிகமாக முன்னிலைப் படுத்துவது மிகுந்த வருத்தத்திற்குரியது.

இற்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் ஒரே தகவல்தொழில்நுட்ப ஊடகம் பத்திரிக்கைகள் தான். அத்தகைய பெருமைக்குரிய அவர்கள், தங்கள் கடமையினை உணர்ந்து, மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுடைய பங்கினை உணர்ந்து, செயல்பட்டால் இந்தியா 2020-ல் உறுதியாக வல்லரசாக மாறும். அதில் எவருக்கும் சந்தேகமிருக்காது.

ஒரு நாட்டின் முதுகெலும்பே பத்திரிக்கைகள் தான். அவர்கள் நினைத் தால், செயல்பட்டால் முடியாதது ஒன்றுமில்லை. பத்திரிக்கைகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது, இனியும் நடிகர், நடிகைகளுக்கு தேவையில்லாமல் முன்னிலைப்படுத்தாதிர்கள். அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்கிற நிலையில் மட்டுமே முன்னிலைப்படுத்துங்கள். அவர்கள்தான் இந்தியாவின் விடிவெள்ளி என்று முன்னிலைப்படுத்தாதிர்கள்.

எதனையுமே உடனடியாக நம்பிவிடும் இந்த மக்கள், பத்திரிக்கைகளால்(உங்களால்) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நீங்கள் முன்னிலைப்படுத்தும் நடிகர்களை நம்பி, இந்த மக்கள் பலமுறை ஏமாற்ற மடைந்துள்ளனர். இனியும் தொடரவேண்டாம் இந்த இழிநிலை. இந்தியாவின் வளர்ச்சியில் உங்கள் பங்கினை, கடமையினை உணர்ந்து செயல்படுங்கள்

என்னையும் என்னுள் கவிதையையும் தேடாதீர்கள்

சிந்தைக்கும்
காட்சிகளுக்கும்
முரன்பாடென்பதால்
கனவுகள்
தள்ளியே
நிற்கின்றது

தனிமையின்
பசிக்குள்
இரவுகள்
விழுங்கப்பட
தூக்கம்
தொலைத்ததை
தேட
நினைக்கையில்
விடிகிறது
காலை

நீழும்
வாழ்வின்
தொடர்கதைகள்
கற்பனையைத்
தின்று
உயிர்வாழ்கிறது

நாளை
எப்படி
இருக்கப்போகிறது
என்பதை
இன்று
தேடுவதிலேயே
இன்று
எப்படி
இருந்ததென்பது
மறந்துபோகிறது

சந்தித்து
சலித்துவிட்ட
வாழ்வுடன்
நட்புக்களும்
.
.
இருத்தலின்
பிடிப்பை
இழந்துவிட்ட
இருப்பு.
.
இன்றும்
கவிதைக்குள்
என்னையும்
என்னுள்
கவிதையையும்
தேடாதீர்கள்
...

புலிகளின் வேட்டை

மானுட வேட்டை போலில்லை
புலிகளின் வேட்டை.
அச்சுறுத்தலின்றி அவை
தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை.

புலிகள் அமைதி விரும்புபவை...
தனித்து இருப்பவை...
தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை...
தன் எல்லை தாண்டி வராது
புலிகள் எப்போதும்...
புலிகளுக்கும் உண்டு
எல்லை தாண்டா இறையாண்மை

புலி இனம் அழிந்து வருவதாக
யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்...
காடுகளின் கம்பீரம் புலிகள்.
புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

சிங்கமும் புலியும்
ஒரு வனத்தில் வாழ்வதில்லை.
சிங்கமும் புலியும்
ஒரு போரில் மோதுவதில்லை.
மோதினால்...
புலிதான் வெல்லுமென்கிறது
வனங்களின் வரலாறு.

-தாமிரா

உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!

ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை.

தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தனித்துவத்தில் சாதனை புரிந்து வெற்றி பெற்ற பின் அவனை ஓஹோ என்று போற்றுகிற சமூகம் அவனுடைய ஆரம்பகாலக் கட்டங்களில் அவனுக்கு உதவும் விதமாக இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. எத்தனையோ துறைகளில் தங்கள் தனித் திறமையால் முத்திரை பதித்தவர்கள் வாழ்க்கை சரிதத்தைப் படிக்கையில் நாம் இதை உணர முடியும்.

ஆனால் கடவுள் படைப்பில் எதுவுமே இன்னொன்றின் நகலாக இருப்பதில்லை என்பதே மகத்தான உண்மை. ஒரு பெற்றோருக்கு இலட்சக்கணக்கில் குழந்தைகள் பிறக்க முடிந்தால் கூட எதுவும் இன்னொன்றின் நகலாக இருக்க முடியாது என்று விஞ்ஞானம் சொல்கிறது. இறைவன் அவ்வளவு நுணுக்கமாக வேறுபடுத்திப் படைக்கும் மனிதனை ஒரே மாடலில் வார்த்து மாற்றி விட சமூகம் விடாமல் முயற்சி செய்வது ஆச்சரியமே அல்லவா?

ஆனால் சோகம் என்ன என்றால் இந்த சமூகத்தின் முயற்சி பெரும்பாலானவர்கள் விஷயத்தில் வெற்றி பெற்று விடுவது தான். ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித் திறமையோடு தான் படைக்கப்படுகிறான். அதை விருத்தி செய்து சாதிக்கவே அவன் இயல்பு அவனைத் தூண்டும். ஆனால் எத்தனை பேரால் தங்கள் அந்தராத்மாவின் குரலைக் கேட்க முடிகிறது? அதன்படி நடக்க முடிகிறது? சமூகம் தன் இரைச்சலால் அந்த சின்னக் குரலை மூழ்கடித்தல்லவா விடுகிறது.

"என்ன இந்தக் கோர்ஸா எடுத்திருக்கிறாய்? முடிச்சா என்ன சம்பாதிக்க முடியும். பேசாம பி.ஈ பண்ணா மாசம் குறைந்த பட்சம் ஐம்பதாயிரமாவது சம்பாதிக்கலாம்"

"என்ன எழுத்தாளராகணுமா? அவனவன் எழுதின பேப்பருக்கான செலவு கூட திருப்பிக் கிடைக்காம கஷ்டப்படறான். அதெல்லாம் விட்டுட்டு இப்படி செய்தா காலம் பூரா கஷ்டப்படாம இருக்கலாம்"

இப்படி எத்தனையோ லாஜிக்கான, மறுக்க முடியாத வாதங்கள். மாறுபட்டு நடக்கவும் விமரிசனங்களைத் தாங்கவும் முடியாமல் போகும் போது, இத்தனை பேர் சொல்வது தப்பாக இருக்க முடியுமா என்று குழப்பம் வரும் போது, நம்முள் ஒலிக்கும் குரல் நிஜமா, பிரமையா என்ற சுய சந்தேகம் வரும் போது பெரும்பாலானவர்கள் சமூகம் வார்க்கும் வார்ப்புகளாக, இயந்திரங்களாக மாறி விடுகிறார்கள். தங்களைத் தொலைத்துக் கொண்டு மற்ற நிழல்களின் நிழல்களாக வெறுமையாகக் கரைந்து போகிறார்கள்.

நீங்கள் நீங்களாக இருக்கும் வரை நிறைவைக் காண்பீர்கள். மற்றவர்களின் நகல்களாக மாற முயற்சிக்கும் போது இயற்கையில் இருந்து விலகி செயற்கையாக வாழத் துவங்கும் போது நிறைவு மறைய ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.

வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனை சந்திக்கும் போது கடவுள் "நீ ஏன் பில் கேட்ஸ் போல் ஆகவில்லை என்று கேட்கப் போவதில்லை. நீ ஏன் நீயாக வாழவில்லை? உன் வாழ்க்கை வாழத் தானே உன்னைப் படைத்தேன். நீ ஏன் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறாய்" என்று தான் கேட்கப்போகிறார். மாறாக மற்றவர்களின் நகல்களாக ஆக்கத் துடிப்பது சைத்தானின் வேலை. இதை நான் ஒரு கவிதையாக இன்னொரு பதிவில் தந்திருந்தேன்.

எனக்கென்று ஒரு வரம்

சாத்தான் நேரில் வந்தது
வரமொன்று கேள் என்றது
பொன்னும் பொருளும் போகங்களும்
போதிய வரை தர நின்றது
நான் நானாக வேண்டும்
எனக் கேட்டேன்.
நீ நீயானால் உன்னிடம்
எனக்கென்ன வேலை என்றது
ஏமாற்றத்துடன் சென்றது

எனவே உங்கள் உள்ளே ஒலிக்கும் குரலை உன்னிப்பாகக் கேளுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையாக உள்ள ஈடுபாடுகளை ஆராயுங்கள். இயற்கைக்கு ஒத்து கட்டுப்பாட்டுடன் வாழுங்கள். அடுத்தவர் செய்கிறார்களே என்று உங்களுக்கு ஒவ்வாத எதையும் செய்ய போகாதீர்கள். மற்றவர்கள் மெச்ச வேண்டுமென்று செயற்கையாக நடந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட வெட்கப்படாதீர்கள்.

திருபாய் அம்பானியும், நரசிம்ம மூர்த்தியும் தங்கள் துறையில் சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்திக் கொண்டார்கள், கொடி கட்டிப் பறந்தார்கள் என்று அவர்களைக் காப்பியடிக்க ஜேசுதாசும், குன்னக்குடி வைத்தியநாதனும் முயன்று இருந்தால் நாம் இரு துறைகளின் மேதைகளைப் பார்ப்பதற்கு பதிலாக இரு அனாமதேயங்களை அல்லவா பார்க்க வேண்டி இருந்திருக்கும்.

எனவே இந்தத் துறை தான் சிறந்தது, இந்த தொழில் தான் உயர்ந்தது, இந்த முறை தான் சரி என்று முன்கூட்டியே கணித்து உங்கள் மீது திணிக்க முனைபவர்களை அலட்சியம் செய்யுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள ஈர்ப்பும் திறமையும் எதன் மீது உள்ளதோ அதில் உங்களுக்கு இருக்கும் தனித் தன்மையோடு ஆர்வத்தோடு முனையுங்கள்.

மற்றவர்கள் சொல்வது எல்லாம் முட்டாள்தனம், அலட்சியப்படுத்துங்கள் என்று சொல்ல வரவில்லை. அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள். அவர்கள் அனுபவ அறிவின் வாக்குகளை சிந்தியுங்கள். ஆனால் முடிவு மட்டும் உங்களுடையதாக இருக்க வேண்டும். உங்கள் உண்மையான தேடலையும், குணாதிசயங்களையும் ஒட்டியே அமைய வேண்டும். அதுவே உங்களுக்கு நிறைவைக் கொடுக்கும்.

மற்றவர் வாழ்வில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர் வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெறுங்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் நகலாக வாழ்ந்து விடாதீர்கள்.

Francis Bacon எழுதிய வரிகளில் ஒன்று உலகப் புகழ் பெற்றது-"Character is Destiny". அதன் கூடவே வரும் இன்னொரு வாசகமும் அர்த்தம் பொதிந்த அருமையான உண்மை. - "Imitation is Suicide". இந்த வாசகத்தை நம் மனதில் பதித்துக் கொள்வது மிகவும் நல்லது. பிறரது நகல்களாக வாழ்வது தற்கொலை செய்து கொள்வது போன்றது.

முதலில் உங்களைக் கண்டறியுங்கள். மற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு உங்களை அமைதியாக ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே உங்களை நீங்கள் கண்டறிய முடியும். இல்லா விட்டால் மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொல்வதன் தொகுப்பையே "நாம்" என்று தவறான கணிப்பில் வாழ்ந்து விடுவீர்கள். உண்மையான உங்களைக் கண்டறிந்த பின், உள்ளே ஒலிக்கும் அந்தக் குரலைக் கேட்க ஆரம்பித்த பின் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரம்பியுங்கள். மற்றவர்கள் கண்களுக்கு அது சிறப்பென்று தோன்றாமல் இருக்கலாம். ஆனால் ஆத்ம திருப்தியை நீங்கள் உங்கள் வாழ்வில் உணர ஆரம்பிப்பீர்கள்.

உங்களைக் கண்டறிந்த பின் எக்காரணம் கொண்டும் உங்களைத் தொலைத்துக் கொள்ளாதீர்கள். அப்படித் தொலைத்து விட்டால் கூடவே வாழ்வின் எல்லா நன்மைகளையும் தொலைத்து விடுவீர்கள் என்பது மட்டுமல்ல, கடவுள் உங்களைப் படைத்ததன் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி வாழ்வை வீணடித்து விடுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

நன்றி:http://www.yarl.com/forum3/index.php?showtopic=49106

தற்கொலை

மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்

ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை

கமபளிப்போர்வைக்குள்
உன் வெப்பந்தேடி
அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்

எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.

உஙக்ள் உலகம் அழியத்தான் போகிறது.

தேர்தல் காலங்களில்
சூறாவளிச் சுற்றுப் பயணம்
..
சூறாவளி ஓய்ந்தபின்
வாக்காளர்களின்
பிணங்களின் மீதும்
வாக்குறுதி வழங்க
இன்னொரு பயணம்.
..
உங்கள்
ஒரு சொட்டு கண்ணீர்கூட
வெள்ள அபாயத்தை
அதிகரிக்கக் கூடும்
..
உங்களால் சாவதைவிடவும்
உங்களால் வாழ்வது கொடிது.
..
விதைக்க அகழந்த மண்ணையும்
வேரிலேயே பொத்திவைத்து
வியர்வையில் குளிர்விக்கும்
எங்கள் மேல்
எப்படி வந்தது இயற்கையில் சீற்றம்?
..
மாங்குரோவ் காடுகளை
நீங்கள் மேய்ந்தபோது
அறியவில்லை நாங்கள் -
..
உங்கள் வங்கிக் கணக்கில்
வலுவாக மையம் கொண்டுருக்கும்
மூலதனம்
வங்காள விரிகுடாவிலிருந்து
எங்களைக் காவு கொள்ளும் என்பதை.
..
காற்றுக்கு
உயிர்களை சுவாசிக்கவும்
தண்ணீருக்கு
இரத்தத்தைக் குடிக்கவும்
பயிற்றுவித்தது யார்-
நீங்கள்தானே?
..
புவி ஈர்ப்பு விசைகூடப்
பொதுவாக இல்லாத
நாடு இது - விளங்கிக் கொண்டோம்.
..தண்ணீர் வடிய வடிய
ஊற்றெடுக்கும் பிணங்களின்
விழிகளில் இருக்கிறது
எங்கள் வெள்ளை அறிக்கை.
..எஙக்ள் சாவுக்கு
என்ன விடை?
..
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
முணுமுணுக்கிறார்கள் -
"உலகம் அழியப் போகிறது"
..உண்மைதான்
உஙக்ள் உலகம் அழியத்தான் போகிறது.
..
துரை. சண்முகம்

இது என்ன நியாயம்?

மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது, 'ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா என்று பாருங்கள்! இந்த இழிநிலையில் பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன்.
நான் சொல்வது இங்குள்ள பல ஆண்களுக்கும் ஏன், பெண்களுக்குங்கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாதபடியாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழைஅடித்துப் பாடமந்திரம் போடுவதாலும், பூச்சுப் பூசிப் பற்றுப் போடுவதாலும் விலக்கக்கூடிய வியாதியல்ல இது. கூர்மையான ஆயுதத்தால் ஆழப்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல் மருந்து) போட்டுப் போக்கடிக்க வேண்டிய வியாதி! அழுத்திப் பிடித்துக் கண்டித்து, அதட்டி அறுத்துத் தீர வேண்டியதாகும்.

நம் பெண்கள் உலகம், பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்களது (பெண்ணை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தியடைகிறார்கள்; பெருமையடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும் துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பொம்மைகளாக (பதுமைகளாக) ஆக்கிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.

நம் பெண்கள் நாட்டுக்கு சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்த பாழாய்ப்போன, ஒழுக்கமற்ற சினிமாப் படங்களையும், சினிமா நட்சத்திரங்களையும் பார்த்து தினம் ஒரு 'பேஷன்' நகை, துணிக்கட்டு, வெட்டு சாயல் ஏற்பட்டதுவே என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? இவை எல்லாவற்றையும் நம்குலப் பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொதுநலத் தொண்டு முதலியவற்றால் கீர்த்தி பெற்ற ஆண்களைப்போல் தாங்களும் ஆகவேண்டும் என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது, பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப்போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகின்றேன்.

எனவே, பெற்றோர்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப்போல் கட்டுவித்தல் வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும் கீர்த்தி புகழ் பெறும் பெண்மணியாகவும் ஆக்க வேண்டும். பெண்ணும், தன்னைப் பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கக் கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும், நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு - தாழ்வு என்ற எண்ணம் எழவேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படக்கூடாது. அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

'வாழ்க்கைத் துணை நலம்' நூலிலிருந்து. (1958 ஆம் ஆண்டுப் பதிப்பு)

பெரியார்

தரமுடியாது உங்களால் எங்கள் ஆத்மாவை.

இந்நிழல் எமதல்ல!
இக் கூடாரங்கள் எமது குடில்கள் அல்ல!
சுற்றி உறுதியாய் கோட்டைப்போல் அமைந்த
மதில் பாதுகாப்பல்ல! பிளவு
காணவும், ஒன்று சேரக் கூடாதென்பதன்
அடையாளமாகயிருக்கும் பிளவு.

முள்வேலிகளையும்
கண்ணிகளையும்
கடந்தபோது யார் யாரைத் தொலைத்தோம்!
யார், யார் யார் யாரை இழந்தோம்!
என்றறியாது
உடல் சிதைந்து, கால் சிதைந்து
ஈனஸ்வரத்தில் துடித்திருந்த எமது மக்களைத்
தாண்டினோம்.

கால் இடறிய இடம் கடல்.

பொங்கிச் சீறும் அலைகளின் நடுவே
சிறுதோணியில் பனி இறங்கும் கடலில் நடுங்கிக்
கொண்டே பயணித்தோம்.
வாழ்தலின் கடைசிமுனையில் நின்றுகொண்டு
வந்து சேர்ந்தோம். இங்கு.

இங்கு தரப்பட்டது இரண்டு தட்டும், டம்ளர்களும்
தரவேண்டியது மேலான ஒன்று.
எங்கள் கிராமத்திலிருந்தது அது.
அதன் சத்தியத்தை நீங்கள் காணமுடியாது.

எமது குடில்
எம்மக்கள் பூத்து வளர்ந்த கோவில். அந்நள்ளிரவில்
ராட்சசர்களைப் போல் உருண்டு வந்த
பீரங்கிகள் எமது குடில்கள் மீது ஏறியிறங்கின.

'அம்மா பயமாயிருக்கு" என்று அலறிய மழலைகளை
கட்டியணைத்தபடி திசையறியாது ஓடிய
எம் மக்களோடு ஓடினோம்.

முரட்டு ஆடை அணிந்தவர்கள் இடைமறித்து எங்கள்
குமரிகளை எங்கே இழுத்துச் சென்றார்கள்.
சேறும் சகதியுமாக கிடந்த பாதையில்
எத்தனை குமரிகள் சின்னாபின்னமாக கிடந்தார்களே!
யாரின் உறவுகள் அவர்கள்

இதுதாமா எமது வாழ்வு?

கொழுந்திட்டு எரியும்போது கண்டோமே!
கிராமத்தின் அழுகையை.
தீ, வளர்த்த தீயில் எமது பயிர்கள், மரங்கள்
வெந்ததே!
எம்மையே இழந்தோமே!

உணர முடிகிறதா உங்களால்!
தரமுடியாது உங்களால் எங்கள்
ஆத்மாவை.

உடைவதில்லை வெறுமைகள்


இம்மழை நாட்களில்
உன்னிடம் பேசுவதற்கென்று
ஏதுமிருப்பதில்லை

எங்கு சென்றாலும்
பின்தொடர்கின்றன
ஈடுசெய்ய முடியாத சில இழப்புகள்
எதையோ நினைவுறுத்தியவாறு

அவற்றை தவிர்த்து
இயல்பாக இருக்க முனைகின்றேன்

பழைய நினைவுகளில் புதைந்து
மெதுவாய் நடக்கையில்
முற்றத்துத் தூணில்
சுயமற்றுச் சாய்ந்துக் கிடக்கையில்
அசைவற்றக் குளத்தில்
தனியேக் கல்லெறிகையில்
நின்று போன மழையை வெறிக்கையில்
மங்கிய மாலையில்
மொட்டை மாடியில் தேனிர் அருந்துகையில்
என எக்கணத்திலும்
வெறுமையை நிறைக்கக்கூடும் இக்காலம்

எனினும் அடுத்து நடப்பவைகளுக்கு
எவர்க்கும் நிட்சயங்களில்லையென
நீட்டுகின்றேன் இப்பொழுதை.

இங்கு
இல்லாமலிருப்பதில்
எவ்விதப் பிரச்சனைகளுமிருப்பதில்லை
இருந்து பின் இல்லாமல் போவதைவிட

- குட்டி செல்வன் (kutty.selvan@live.com)

மழை



நீ இல்லாத
வெறுமையின் சூழலை
சூசகமாய் உணர்த்திச் சென்றது
அன்றைய மாலை நேரத்து
மழை...

**********

நாம் கைகோர்த்து
நடந்து சென்ற
மழைக்கால மாலைப் பொழுதை
நினைவு படுத்திச் செல்கிறது
இந்த மாலை நேரத்து
மழை...

**********

மாலை நேரம்
மழைச் சாரல்
சன்னலோரம்
தேநீர் கோப்பை
துணைக்கு.....
உன் நினைவுகள்

***********

என் மழைக்கால
மாலை நேரத்து
மிதிவண்டிப் பயணங்கள்
எல்லாம் முற்றுப் பெறுவது
உன் வீட்டு எதிரில் தான்

க‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்.

க‌ட‌ல்க‌ளைத் தாண்டி கேட்கிற‌து

வீறிட்ட‌ சிசுக்குர‌ல்,

காப்புடைந்த‌ பெண்ணின் க‌த‌ற‌ல்,

க‌ன‌ன்றெரியும் வீட்டின் குமுற‌ல்,

ச‌ம‌ர‌ச‌ப் பேச்சின் அல‌ங்கார‌ வ‌ளைவுக்குள்

எதிரெதிர் இன‌த்து ம‌க‌னும் ம‌க‌ளும்

முகூர்த்த‌ வேளையில்

சிர‌ச‌றுப‌ட்டு அல‌றிவிழும் ர‌ண‌க‌ள‌ம்

இன‌ம் மொழி ம‌த‌ம் என்று

ஊர்வ‌ல‌ம் எடுத்த‌

மூளையின் தாதுக்க‌ள் மோதி

ச‌ங்க‌ம‌ம் பிற‌ழ்ந்து

சிக்கெடுத்த‌து ஒரு முடிச்சு

முடிச்சு இனி

வேட்டிக்கும் முந்தானைக்கும‌ல்ல‌,

முஷ்டிக்கும் பொறிவில்லுக்கும்

அமைதியின் அனுஷ்டான‌ங்க‌ளும்

ஆர‌வார‌ம் ஒடுங்கி ஸ்த‌ம்பித்த‌ன‌.

க‌ல்லும் உருகி

அலையெடுக்கிற‌து

எரிம‌லைப் பிழ‌ம்பு.

ம‌ரண‌ம் ம‌ட்டுமே என்றான‌ பின்

ம‌ர‌ண‌ம் தான் என்ன‌..?

‍‍‍-----பிர‌மிள்

உனக்கான வரவேற்பு...!

காற்றின் சலசலப்பில்
சுவாசம் பெறும் தென்றல்..
என்னின் மயிர்கால்களின்
அசைவுகளில் கூட
உனக்கான வரவேற்பு...!

எத்தனை பொழுதுகள் கழிந்தாலென்ன
உன்னின் மூச்சு காற்றில் எனது மௌனம்
கலையும் பொழுதுகளின்
எதிர்பார்ப்புகள்.. இன்னும்..!

கண்களை மட்டுமே
பார்க்கிறேன்.. அதைவிடவா.
உன்னின் மனதை
சொல்லிவிடப் போகிறது
சப்தம் எழுப்பும்
நாக்கின் மடிப்புகள்..!

வெட்ட வெட்ட வளரும்
நகம் போன்றது
இரவுகளில் ஏமாற்றம்
விசாலப்படும்போது..!
ஒவ்வொரு விடியலிலும்
உனக்கான காத்திருப்பு
ஆர்வமாக்குகிறது.
அந்நியப்படாத உனக்கான
நினைவுகளால்
தரம் பிரித்து
தவிர்க்கவா முடியும்

ஒவ்வொரு விடியலிலும்
காணமல் போகும்
உனக்கான தேடல்கள்
மனதில் தங்கிவிட்ட பூஞ்சைகளாய்
மறுபடியும் உயிர்த்தெழுகிறது
தனிமை கலைத்து
என் பொழுதுகளில்
சுவசக்காற்றாய்
உன் சுவாசம் மலர
வந்து சேர்ந்து
வழி நடத்து
வருகையின் தவப்பொழுதுகளில்
இன்னும் நான்....!

இந்த மெல்லிய இரவில்

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச் சுட்டி
எதைப்பற்றி நான்
பாடப் போகிறேன்?

பாசம் மனசு நட்பு
எல்லாமே பொய்யாகிவிட்ட
வாழ்க்கையை இனியும்
வாழ்ந்து எதை
சாதிக்கப்போகிறது
எனது எதிர்காலம்..

வலிக்கிறது
என் விரல்களும் இதயமும்..

கருகிப்போன கனவுகளை
மீண்டும் யாசிக்கிறது
என் கண்கள்..
உருகிப்போன நினைவுகளை
மீண்டும் தாகிக்கிறது
என் கணங்கள்

வலிகளில் நிறைந்து போன
என் விழிகளைப்பற்றி
ரணங்களில் புதைந்து போன
என் ஆத்மார்த்தம் பற்றி
துயரப்பாடல்கள் உச்சரிக்கும்
என் பேனா பற்றி
காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்
என் பாவப்பட்ட இதயம் பற்றி
இனிப்பேச யாருமில்லையா?

உலுக்கி எடுக்கும்
அதிர்வுகளைத் தாங்கி
வாழ்தல் மீதான பயணம்
நீள்வது அத்தனை எளிதில்லை

இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்
அநாதையான பின்பும்
நம்பியிருந்த உறவுகள்
சுக்கு நூறான பின்பும்
தேக்கி வைத்த நம்பிக்கை
வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?

காலியாகிப்போன பாசப்பைகளில்
இனி நான் இடப்போவதில்லை
சில்லறை மனிதர்களை..

எல்லா இதயங்களிலும்
போர்வைகள்..
எல்லா முகங்களிலும
முகமூடிகள்..
எல்லா புன்னகைகளிலும்
விஷங்கள்..
எல்லா பார்வைகளிலும்
வக்கிரங்கள்..

உறவென்னும் தேசத்தில்
அகதியாக்கப்பட்டவன் நான்

மனிதர்களைத் தேடிய
என் நித்திய பயணத்தில்
எப்போடு நிகழும்
திடீர் திருப்பம்?

யாரையும் குற்றம் சாட்டவில்லை
காரணம் முதல் குற்றவாளி
நான்தானே?

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்டி
இன்னும்
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்?

---நிந்தவூர் ஷிப்லி

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்-- தீபச்செல்வன்


வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருந்த
அம்மாவை அக்கராயனில்
நான் தேடிக்கொண்டிருந்தேன்
ஷெல்களுக்குள்
அம்மா ஐயனார் கோயிலை
விழுந்து கும்பிட்டாள்
ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.

நேற்று நடந்த கடும் சண்டையில்
சிதைந்த கிராமத்தில்
கிடந்தன படைகளின் உடல்கள்
கைப்பற்றப்பட்ட
படைகளின் உடல்களை
கணக்கிட்டு பார்த்தபடி
சிதைந்த உடல்கள்
கிடக்கும் மைதானத்தில்
பதுங்குகுழியிலிருந்து
வெளியில் வந்த
சனங்கள் நிறைகின்றனர்.

பக்கத்து வீட்டில்
போராளியின் மரணத்தில்
எழுகிற அழுகையுடன்
இன்றைக்கு நாலாவது தடவையாக
திடுக்கிட்டு எழும்பிய அம்மா
முறிகண்டி பிள்ளையாரை
கும்பிட்டபடி ஓடுகிறாள்
பூக்களும் மண்ணும்
கைகளில் பெருகுகிறது.

02

போன கிழமை விட்டு வந்த
கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது
குசினிக்குப் பக்கத்தில்
கிடந்த பதுங்குகுழியில்
படைகளின் ஏழு சடலங்கள்
மூடுண்டு கிடந்தன.

போராளிகள் கைப்பற்றிய
ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த
கிளைமோர்களைக் கண்டும்
எறிகனைகளைக்கண்டும்
சனங்கள் பெருமூச்செறிந்தனர்.

போர் வாழ்வை அழித்தபொழுது
கிராமங்கள் போர்க்களமாகின
அக்கராயன்குளம் காடுகளில்
ஒளிந்திருக்கும் படைகளிடம்
நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது

03

அகதிகள் வீடாயிருந்த
ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன
அகதிக்குடியிருப்புகள் நிறைந்த
மணியங்குளம் கிராமம்
எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.

நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது
வெளியில் வந்து விடுகிறேன்
தலைகளில் விழும் எறிகனைகளை
ஏந்தும் பிள்ளைகளை
நினைத்து துடிக்கிற
தாய்மார்கள் வெளியில் நின்றனர்.

செஞ்சிலுவைச்சங்கம்
கொண்டு வந்த போராளியின் உடல்
மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு சிங்களத்தாய்
துடித்தழுகிறாள்
ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்
துடித்தழுகிறாள்
சிதைந்த கிராமங்களில்
பரவிக்கிடந்தன
படைகளின் உடல்கள்
மதவாச்சியை கடந்து
படைகள் வரத்தொடங்கியபொழுது
வவுனியாவைக்கடந்து
போராளிகள் போகத்தொடங்கினர்.

தெருமுறிகண்டி மடங்களில்
கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.

புதுமுறிப்பில் வீழ்ந்த
ஏறிகனைகளில் இறந்த
குழந்தைகள்
வரிச்சீருடைகளை அணிந்த
காட்சிகளை
ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

படைகளை நோக்கிச் சுடுகிற
போராளிகளின் மனங்களில் இருந்தன
பசுமையான கிராமங்களும்
அங்கு நடமாடித் திரிகிற சனங்களும்.

- தீபச்செல்வன் (deebachelvan@gmail.com)

வெற்றிடம்

இருள் சூழ்ந்த
கானகத்தின் மௌனத்தில்
நிராயுதபாணியாய் நின்று
கொண்டிருக்கிறது மனது
தனித்தீவில் தன்னந்தனியாய்
மாட்டிக் கொண்டவனின்
கைக்கடிகாரமும் உடைந்தது போல
தவிக்கிறது இயலாமை
எங்கிருந்தோ வந்து
என் இமையிரண்டையும்
பறித்துச் சென்று விட்டுத்
தூங்கச் சொல்கிறது
இதுகாரும் நிகழ்ந்த நிகழ்வுகள்
நிலவின் நகரலைக்
கணக்கெடுத்துக்கொண்டே
விண்மீன்களை எண்ணுவது போல
வினாடிக்கு வினாடி
குறையாத அனுபவங்களை
அசை போடுகிறது ஆழ்மனது
தூக்கத்திலிருந்து விழித்துக்
கொண்ட குழந்தை
தாயின் விரல்களைத்
தேடுவது போல
பக்கத்து இடத்தை
வெறித்துப் பார்க்கிறது
தேடித் தொலையும் மனது
விடியப் போகும் வானத்திலிருந்து
இமையிரண்டும் திருப்பி
அனுப்பப்பட்டு தூங்கத்
தயாராகும் விழிகளுக்கு
எப்படிப் புரிய வைப்பது
என் நண்பன் வருவதற்கு
இன்னும் ஒரு வாரம்
இருக்கிறதென்று.

மெய் வருத்தம்

வெப்பம் வேண்டித் தவிக்கும்
அதிகாலை மலரின் ஆவலில்
சுண்டக் காய்ச்சிய முத்தமிட்டு
வலிவடிய உரையாட நினைப்பதுண்டு
உன் ஆசையும் எதிர்ப்பார்ப்பும்
இதுவாகத்தான் இருக்கக் கூடும்
என்ன செய்ய
உன்னில் கரைந்த
மிகு இன்பத்தின் அயர்ச்சியில்
கண்ணசந்து விடுகிறேன்.

--ந. பெரியசாமி
thanks
to http://www.keetru.com/thakkai/aug08/periyasamy.php

காத்திருப்பு

ஓட்டமும் நடையுமாக
வந்து சேர்ந்த என்னைப் பார்த்து
ஒரு புன்னகையை உதிர்ப்பாய்...
காத்திருந்த களைப்பெல்லாம்
காணாமல் போயிருக்கும் உனக்கு...
கோபப்படுவாய் என நான்
யோசித்து வைத்திருந்த
பொய்க் காரணங்களை
தவிடுபொடியாக்கிவிடும்
உன் அன்பின் பிடி...
உனக்குள் சிரித்தபடி
அன்றைய இரவில்
நீ எழுதப்போகும் கவிதை
இப்படித்தானே தொடங்கும்?
`நம்மைச் சேர்த்த நொடியை
உறைய வைக்க
மந்திரக் கோல் ஒன்று வேண்டும்...

---உமா ஷக்தி

உணர்வுகள்....

பகிர்ந்து கொள்ளப்படாத ஒரு மென் உணர்வு
என்னுள்ளே சில நாள்கள் ஒளிந்து கிடக்கிறது.
சிறுகச் சிறுக அது என்னைத் தின்று களிக்கையில்
பூக்களும் புன்சிரிப்புமாக ஒருவன் கடந்து போனான்
வெட்கமின்றி அவனைப் பார்த்து மெல்லச் சிரித்தபோது
மூடுபனி போல் அவன் பட்டும் படாமல் படர்ந்துவிட்டு
பின், நொடிப் பொழுதில் மறைந்துவிட்டான்!
தவிப்பைத் தாண்டிய வலியில்
உறைந்தே போனது எனதழைப்பின் ஆரம்பங்கள்!

--உமா ஷக்தி

umashakthi.blogspot.com

ஒரு (இலங்கை) ராணுவ வீரனின் தொழில் அறம்...!

நீ மனிதனல்ல ராணுவ வீரன்

பயிற்சியளிக்கப் பட்ட மிருகம்..

உனது நினைவில் இருக்க வேண்டியது

உன் பெயர் கூட அல்ல உனது அடையாள எண் மட்டுமே..

கேள்வி கேட்காமல் மேலதிகாரிக்கு கீழ்படிந்து நட..!

ஒரு விசில் சத்தம் அல்லது உத்தரவு வந்தவுடன் சுடு..

தாய்,தந்தை,குழ்ந்தை எதுவாயினும் சுடு

அனைத்தையும் தரை மட்டமாக்கு

எத்தனை தலைகளை கொய்தாய் என்பதை பொறுத்து

உனது தகுதி தீர்மானிக்கப்படும்....

| author: senthilaan

க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே..! நீங்க‌ள் போராட்ட‌த்தை ஆத‌ரிக்காவிடில் சிங்க‌ள‌வ‌னை ஆத‌ரிப்ப‌தாக‌த் தான் அர்த்த‌ம்..!

த‌மிழ‌ர் ப‌ல‌ரும் கொண்டிருக்கிற‌ மூட‌ ந‌ம்பிக்கைக‌ளில் ஒன்றான‌ "த‌மிழினத் த‌லைவ‌ர்" க‌லைஞ‌ர் ஓரு முடிவு எடுப்பார் ஈழ‌த்தில் செத்து ம‌டிகின்ற‌ ந‌ம‌து ச‌கோத‌ர‌ர்க‌ளை காப்பாற்றுவார் என்ற‌ மூட‌ ந‌ம்பிக்கை தான் மிக‌ மோச‌மான‌து.

க‌ருணாநிதிக்கு த‌மிழின‌த் த‌லைவ‌ர் ப‌ட்ட‌த்தை யாருமே கொடுக்க‌வில்லை த‌ன‌க்குத் தானே சூடிக் கொண்ட‌ ப‌ட்ட‌ம் தான் அது ஏனென்றால் "ப‌ட்ட‌ங்க‌ள்" சூடிக்கொள்வ‌தில் அவ‌ருக்கு நிக‌ர் அவ‌ர்தான்.

பிர‌பாக‌ர‌ன் ஜ‌ன‌நாய‌க‌வாதி இல்லை அவ‌ர் ஒரு ச‌ர்வாதிகாரி என்கிறார் ச‌ரி ஜ‌ன‌நாய‌க‌வாதி க‌ருணாநிதியின் ஜ‌ன‌நாய‌க‌ப் ப‌ண்புக‌ளை கொஞ்ச‌ம் ஆராய்வோம்..

1.அறிஞ‌ர் அண்ணாவிற்கு பின் த‌லைவ‌ராக வ‌ந்திருக்க‌ வேண்டிய‌ நெடுஞ்செழிய‌னுக்கு குழி ப‌றித்து சினிமாகார‌ரான‌ எம்.ஜி.ஆருட‌ன் இணைந்து துரோக‌ம் செய்து த‌லைவராக‌ ஆனார்.

2.பின்ன‌ர் தான் த‌லைவ‌ராக‌ வ‌ர‌ உத‌விய‌ எம்.ஜி.ஆர் க‌ண‌க்கு கேட்ட‌தால் அவ‌ரை வெளியேற்றி த‌ன‌து ஜ‌ன‌நாய‌க‌ ப‌ண்பை இரண்டாவ‌தாக‌ நிரூபித்தார்.

3.மிசா கொடுமைக‌ளை அர‌ங்கேற்றிய‌ "ஜ‌ன‌நாய‌க‌வாதி" இந்திராவுட‌ன் கூட்ட‌ணி அமைத்து மீண்டும் நிரூபித்தார்.

4.எந்த‌ த‌குதியும் இல்லாத‌ த‌ன‌து ம‌க‌னுக்கு ப‌த‌வி கொடுத்தும்,எங்கே தன‌து ம‌க‌னின் ம‌குடாபிச‌த்துக்கு போட்டியாக‌ வ‌ந்துவிடுவாரோ என்று வைகோவை வெளியேற்றியும் நிரூபித்தார்.

5.பின்ன‌ர் அழ‌கிரி,த‌யாநிதி,க‌னிமொழி,க‌ய‌ல்விழி என்று த‌ன‌து மொத்த‌ குடும்ப‌த்தையும் க‌ள‌த்தில் இற‌க்கி த‌மிழ்நாட்டையே கூறு போட்டு முழுமையான‌ ஜ‌ன‌நாய‌க‌வாதியாக‌ ப‌ரிண‌மித்துள்ளார்.

ஈழ‌ம்,காவிரி,முல்லை பெரியாறு என்று வ‌ர‌லாற்றின் வ‌ழி நெடுகிலும் இவ‌ருடைய அல‌ட்சிய‌மும், துரோக‌மும் தொட‌ர்ந்து கொண்டிருகிற‌து.

ந‌ம‌து "ஜ‌ன‌நாய‌க‌ அமைப்பே" முட்டாள்த‌ன‌மான‌ ஒன்று என்ப‌தும் அது முதிர்ச்சிய‌ற்ற‌ ந‌ம‌து ம‌க்க‌ளுக்கு முற்றிலும் பொருந்தாது என்ப‌துக்கு சாலைகளின் நடுவே அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சுவ‌ர்க‌ளே சாட்சி ஏனென்றால் வெண்கோடுக‌ளால் எல்லை தாண்டும் வாக‌ன‌ங்க‌ளை த‌டுக்க‌ முடியாது என்ப‌தால்தானே..?

க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே தி.மு.க‌ வில் நீங்க‌ள் உருவாக்கிய‌ "ஜ‌ன‌நாய‌க‌ம்" சூட‌மேந்திக‌ளையும்,அடிவ‌ருடிக‌ளையும்,துதிபாடிக‌ளையும் உருவாக்கிய‌து தான்.

க‌ருணாநிதிக்க‌ள்,ஜெய‌ல‌லிதாக்க‌ளை(பாசிச‌) உருவாக்கிய‌துதான் ந‌ம‌து "ஜ‌ன‌நாய‌க‌த்தின்" விப‌த்து(சாத‌னை??).

(க‌ட‌ந்த‌ ப‌ல‌ தேர்த‌ல்க‌ளில் நான் தி.மு.க‌ விற்கே வாக்க‌ளித்தேன் குறைந்த‌ தீமை என்ற‌ அடிப்ப‌டையில்)
இறுதியாக‌ ஒரு உறுதியான‌,தீவிர‌மான‌ நிலையெடுத்து போர‌ட்ட‌த்தை ஆத‌ரிக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்.

அத‌ன் மூல‌மாவ‌து துரோக‌த்தின் வீச்சாவ‌து கொஞ்ச‌ம் குறையும் இல்லையெனில் நீரோ ம‌ன்ன‌னின் வ‌ரிசையில் சேர்க்க‌ப்ப‌டும் நாள் வெகு தொலைவில் இல்லை.


மீண்டும் ஒரு முறை என‌து த‌லைப்பை வாசிக்கிறேன்

"க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே..! நீங்க‌ள் போராட்ட‌த்தை ஆத‌ரிக்காவிடில் சிங்க‌ள‌வ‌னை ஆத‌ரிப்ப‌தாக‌த் தான் அர்த்த‌ம்..!"

நேரம் 6:56 Pm

விடை பெறுகிறேன் ---வைக்கம் முஹம்மது பஷீர்

அழகான இந்தப் புவியில் எனக்கு அனுமதித்திருந்த நேரம் முழுவதும் முடிந்து விட்டது.என்னிடம் நேரம் சிறிது கூட இல்லை.அல்லாவின் கஜானாவில் மட்டுமே நேரம் இருக்கிறது.ஆமாம் ஒரு போதும் முடிவில்லாத நேரம் முடிவற்ற முடிவில்லாத நேரம்.
மரணம் என்னை பயப்படுத்துவதும் இல்லை பயப்படுத்தாமல் இருந்ததும் இல்லை.மரணம் ஒதுக்கி விட முடியாத ஒன்றல்லவா?அது வரும் போது வரட்டுமே பிறந்தது முதலே கொஞ்சம் அதிகமான தடவைகள் மரணத்தை தொட்டு விட்டு வந்தவன் நான்.ஒரு முறை என் இடது காலில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது.அடுத்த முறை வலது காலின் பாதத்தின் வழியாக ஒரு பெரிய விரியன் பாம்பு மெல்ல மிக மெல்ல ஊர்ந்து சென்றது.இன்னொரு முறை எங்கள் வீட்டில் மூன்று நான்கு தடவைகள் விரியன் பாம்பு நுழைந்தது.அதுவும் இரவில் கடைசி முறை நான்கு விரல்கள் இடை வெளியில்தான் மரணத்தோடு இருந்தேன்.மிதித்தும் இருப்பேன்.
நான் இப்போது மரணித்து விட்டேன்.இனிமேல் யாராது என்னை நினைப்பர்களா?என்னை யாரும் நினைக்க வேண்டாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது எதற்காக நினைக்க வேண்டும்.கோடான கோடி அனந்த கோடி ஆண்களும் பெண்களும் இது வரையில் இறந்திருபபர்கள் அல்லவா!அவர்கள் எல்லோரையும் நாம் நினைக்கிறோமா?
அப்புறம் என்னுடைய புத்தகங்கள் அவை எல்லாம் எவளவு காலத்துக்கு நிலைத்து நிற்கும்?புது உலகம் வந்தால் பழமை எல்லாம் புதுமையில் மறைய வேண்டியதுதானே?இங்கே என்னுடையது என்று கூறுவதற்கு என்ன எஞ்சி இருக்கிறது.எனக்கென ஒரு மண் துகளளவு அறிவையாவது நான் இந்த பூமிக்கு கொடையாக அளித்துள்ளேனோ? எழுத்துக்கள் வார்த்தைகள் எண்ணங்கள் இவை எல்லாவற்றையும் கோடான கோடி மனிதர்கள் பயன் படுத்தியவைதானே!
வைக்கம் முகம்மது பஷீர் மரணித்தால் செய்தி வருகிறது எப்படி செத்தார்? அப்போது ஒரு காரணம் வேணும் அவளவுதான்.இப்போது இதோ நான் இறந்து விட்டிருக்கிறேன்.போதுமான காரணங்கள் உண்டா?என்று நீங்கள்தான் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் நான் தான் முன்பே சொன்னேனே என் பக்கத்தில் முடிவில்லாத நேரம் சிறிதுமில்லை எல்லோருக்கும் சலாம் மாங்கோஸ்டைன் மரத்துக்கும் அனைத்து வகையான உயிர்களுக்கும் சலாம்.ஏதாவது தவறு செய்திருந்தேனேயானால் அண்ட பிரபஞ்சமே மன்னியுங்கள் எல்லோருக்கும் மங்களம்."

ஓவியங்கள்

மீட்சியுறா

கடந்த காலங்கள்

காயங்கள் மீறிய தழும்பென

நிலைத்து நினைவுறுத்துகின்றன

சம்பவங்களை ..



கம்பிகள் அறியாமல்
மீட்டும் விரல்கள் அறியாமல்


கேட்கும் செவிகள் அறியாமல்
இசையின் வழியே வந்திறங்கி
மீட்டுகின்றன புலன்களை ...



சற்று முன் நடந்தது போல்

தோன்றி

கண்கள் கட்டிக் கொண்டு

காற்றில் கைகள் துழாவி

கண்ணாம்பூச்சி ஆடச் செய்கின்றன ...



மழைநேரங்களில் புகைப்படங்கள் நோக்கும்

உருவங்களிடமிருந்து

மழைகளினூடே கலந்து கரையும்

பெருமூச்சுகளைக் கிளப்புகின்றன ..



பின்னிரவின் உறக்கத்தில்

காணும் கடந்த காலங்களின் கனவிற்கு

இதழ்கள் வருடும் புன்னகை

கண்விழித்த பிறகு

காணமல் கலைந்து போய்விடுகிறது

கனவுடனேயே ..



தினமும் பூக்கும்

புதிய பூக்கள்

ரசிக்கும் கண்களுக்கு

புலப்படுவதில்லை

நேற்றைய பூவிற்கான

செடியின் கண்ணீர் ...



எல்லா வெள்ளிகளின் மரணங்களும்

ஞாயிறன்று உயிர்த்தெழுவதில்லை

அடுத்த வெள்ளிகள்

அதற்குள் வரிசையில் வந்தேகுகின்றன

புதிதாய் மரிப்பதற்கு ..



பெரும்பாலான கண்ணீர் சுரப்பிகள்

கை கடந்து போன

கடிகார நொடிகளுக்கெனவே

இறைத்து நொடிக்கின்றன ..



கடந்த நொடிகள்

மறந்தொழிய வேண்டும்

இல்லை இறந்த காலத்திற்குள்

இறங்க முடிந்திட வேண்டும்

எப்பொழுதும் வெறித்துப் பார்க்கப்படும் விட்டத்தில்

ஊசலாடிக் கொண்டிருக்கும்

நினைவுகளின் தூசிகள் படிந்த மின்விசிறிக்கு

அலுப்பு தட்டும் முன் ...

Thanks to Rejovasan

Rejovaasan.com

கசப்பின் வலி

உயிர்ப்பை
நிரூபிக்க, செத்துக் காண்பிக்க
வேண்டியிருக்கிறது.

மாதவிலக்கென்பதை
மறைத்து வாடிக்கையாளனை
அழைக்க வைக்கிறது.

சாக்கு போதுமானதாய்
இருக்கிறது காசல்ல,
குடிக்க

விவாகரத்தை
பற்றிப் பேசிய இரவில்
கனவில் வந்து தொலைக்கிறாள்
என்னை யாசித்த பெண்

கற்பழிக்கிறவன் தருகிற
முத்தமென விமர்சனங்கள்

கடவுள் மட்டுமே மிச்சமிருக்கிற
நம்பிக்கைகளின்
குதிரைகள் சாத்தான்களாய் இருக்கின்றன.

நெஞ்செரிய புகைத்து
கழிகிறது கசப்பின் வலி...

நகரத்திலிருந்து வெளியேறுகிறவனின் குரல்

இந்த வினாடியின் கடைசிப் புள்ளியிலிருந்து
வெளியேறிவிடத் துடிக்கறான் அவன்

பெரு நகரமொன்றில் அவன் மூச்சுக்காற்று
படர்ந்த அம்முதல் கணம் அசுத்தம்
மேலும் பரவும் பேரபாயத்தை உணர்ந்தவர்கள்
முதலில் அவனை எச்சரித்தார்கள்.

காலி மதுப்புட்டிகளின் இறுதித்துளிகளைச்
சுவைத்து உறிஞ்சும் அச்சிறுவனையே
முதலில் அவன் கண்ணுற நேர்ந்தது.
அவன் போதையில் கொறித்த மிச்சத்தை
யாருமறியாமல் பொட்டலமாக்கிக் கொண்ட
நாகரிக இளைஞனின் பசியை
இடைவிடாமல் கிசுகிசுக்கும்
மெல்லிய இசை பரவுகிறது காற்றில் நஞ்சாய்.

நாகரிக யுவதியின் இடை தழுவி
அவன் நடனமாடும் நள்ளிரவில்
வலுவில் அடக்கிக் கொள்கிறான்
எளிதில் ஜீரணிக்காத யாவற்றையும்

விடியற்காலை தன் ஆடைகளைத் தளர்த்து
பெருமூச்சுவிடுகிறது.
இறுதியாய் அவன் அந்த நகரின்
சமாதிக்கு இறுதிக் கல்லாகிறான்.

--புன்னகை.க.அம்சப்ரியா

முடிவில்லாததொரு பயணம்

எங்கு ஆரம்பித்ததென்று
தெரியவில்லை என் பயணம்
தூக்கம் விழித்துப் பார்த்தால்
பசியெடுத்த குழந்தையாய்
வீறிட்டு அழுது கொண்டிருக்கிறேன்

புகைவண்டியொத்த
இந்த வாழ்க்கைப் பயணத்தினூடே
அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறிக்கொண்டு
பக்கத்து இருக்கையில் அமர்ந்தோரெல்லாம்
அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்
அண்ணன் எனவும் மனைவி எனவும்
பிள்ளை எனவும்....

பயணங்களினூடே அன்பும் காதலும்
பரஸ்பரம் பரிமாறப்பட்டாலும்
எனது கடைசி நிறுத்தம் வரை
என்னுடன் யாரும்
துணைக்கு வருவதாய் தெரியவில்லை!

அவரவர் நிறுத்தங்களில்
அவரவர் இறங்கிக்கொள்ள
இறுதி நாளுக்கப்பாலும்
தொடர்கிறது என் பயணம்
நான் பயணித்த வண்டிகூட இல்லாமல்!

உன் கவிதைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன்

உன் கவிதைகளுக்கு என்னிடம் பொறுமையில்லை
சரம் வெடிப்பது போலிருக்கிறது
எனது அன்றாடம்
சோகம் சொட்டும் வரிகளுக்கிடையில்
சில மணித்துளிகளல்ல
பல யுகங்கள் கடந்து விடுகின்றன

உன் கவிதைகளுக்கு என்னிடம் நேரம் இல்லை
மேசையை நிறைத்திருக்கும் இன்று
எனது மாலையையும்
இரவையும்
விழுங்கப் பசித்திருக்கிறது

உன் கவிதைகள் எனக்குப் பிடிக்கவில்லை
அவை நெருஞ்சி முள்ளைப் போல்
குத்துவதும் அல்லாமல்
நிரந்தரமாய் நின்று உறுத்துகின்றன

அழகியல் உனக்கு சுத்தமாய் தெரியவில்லை
உன் கவிதைகள் அசிங்கமாய்
சீழ் நிறைந்த சிறு புண்களாய் வீச்சமடிக்கின்றன

உன் கவிதைகளை நான் முற்றிலும் வெறுக்கிறேன்
ஏன் தெரியுமா
அவற்றை
நீ எழுதினாய்
நான் வாழ்கிறேன்

இது நதியின் நாள்

துளிதுளியாய்ச் சிதறும்
பரவசங்களை
நனைந்த என்
குட்டைப் பாவாடை முழுக்க
அள்ளிச் சேமிக்கிறேன்
ஒவ்வொன்றாய்ச் சிதறாமல்

பூமியின் முலைகளில்
ஊற்றெடுத்து வழியும்
வெண்மையின் பாலில்
என் பாவங்களை
கழுவித் துவைத்து உலர விடுகிறேன்.
ஓடிக்கொண்டே இருக்கும்
என் உற்சாக நதியில்
பானங்களை அள்ளிப் பருகுகிறேன்.
தரிசாகக் கிடக்கும்
மனவெளியில்
விதைகளை விதைத்து
மழையைப் பெய்விக்கிறான்
பசுமையின் சொந்தக்காரன்.
ஓர் அழகிய இசை
ஆடைகளைக் களைந்துவிட்டு
கை, கால்கள் முளைத்து
நடனமிட்டு ஓடுகிறது
நிர்வாணமாய்.
பரந்த வெளியின் பறவைகள்
தங்கள் காதலனின் பெயரை
உரக்கக் கத்தியபடி
பாடி விரைகின்றன.
மொத்தமாய்ச் சேர்த்த
கனவுகள் வெடித்து
பூமியெங்கும் சிதறட்டும் இன்று.

இது நதியின் நாள்
இது அருவியின் நாள்
இது வனாந்தரத்தின் நாள்
இது எனது நாள்


----பெண்ணியா (இலங்கை)

புறக்கணிப்பின் வெறுமை

இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது

நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு

எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை
-சல்மா

ஒருவன் கொல்லப்படும் போது...

ஒருவன் கொல்லப்படும் போது
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது

குருதி பெருகி வடிந்து
பச்சை பசும் புல் தரை
செவ்வரத்தம் பூக்கள் போலாகப் போகின்றது

மலக் குழிக்குள் பதுங்கியிருக்கும்
ஈக்கள்
இரட்டைச் சிறகு முளைத்துப் பறந்து
மொய்க்கப் போகின்றன

இன்னும்
மல்லிகை மணம் கசியும் காற்று
பிணநெடி சுமந்து வீசப் போகின்றது
அழும் குரல்கள் கணப் பொழுதில்
ஓய்ந்துவிடப் போகின்றன
இவை தவிர
ஒருவன் கொல்லப்படும் போது
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது
இன்னுமொருவன் கொல்லப்படுவான்
என்பதைத் தவிர.

---பறவை போல சிறகடிக்கும் கடல் தொகுப்பில் இருந்து ..அலறி

கடவுளின் கண்களாய்..

ஒரு தக்கையைப் போல்

அந்தச் சொல்

மிதந்து கொண்டிருந்தது

முடிவுகளற்ற பெருவெளியில்

இருபுறம் புரண்டோடும்

இருள்வெளியில்

கடவுளின் கண்களாய்

மிதந்து கொண்டிருந்தது

அலச்சல் கொண்ட புத்தியுடன்,

ஒங்கிக் கொள்ள இயலாமல்

பயண விளிம்புகளில்

ஆவேசமாய் உரசியபடி

அந்தச் சொல்

ஒரு தக்கையப்போல்

மிதந் கொண்டிருந்த

அர்த்தம் எனும் ராட்சத மீன்

பெரும்பசியுடன் விழுங்கும்வரை.

--ஜனமித்திரன்

மஞ்சள் நிறமடையும் பொலிவிய நாட்குறிப்பு

மஞ்சள் நிறமடையும் பொலிவிய நாட்குறிப்பு

என்னிடமிருக்கிற
பொலிவிய நாட்குறிப்புகள் பிரதி
மிகவும் பழசானது தான்

நாளுக்கு நாள்
அதன் பக்கங்கள் மஞ்சளாகிக் கொண்டிருப்பதை
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
சொல்லித் தரப்பட்ட மௌனத்துடன்

எல்லா சிவப்புக் கனவுகளும்
இப்படியாக,
இப்படியாகவேதான்,
ஆமாம், இப்படியான மௌனத்துடன் தான்
நிறமிழந்து -அழிந்து- இல்லாது போயிற்று

சே
ஒக்டோபர் ஏழாம் தேதி*
இப்படியெழுதியிருந்தார்;
At 2 we rested
as it was now useless try
to advance.
____________________
• சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்ட தினம்

Thanks to muranveli-Hariharan

மனப்பறவை..

நித்தம் நித்தம்
அம்புகள் பாய்ந்த வலியில்
துடிக்கிறது

ரத்தம் கசிய கசிய
சன்னல் கம்பிகளின்
இரும்புப் பிடிகளுக்கு
நடுவில்
கதவுகள் திறக்க
காத்திருக்கிறது
போதும் போதும்
பறந்தது போதுமென்று
தடவிக் கொடுக்கிறது
காற்று.

சிறைகளை உடைத்து
வெளியில் வந்துவிடு
இரவோடு இரவாக
அழைக்கிறது
நிலவு.

ஆகாயமே சிறையாகிப் போனதால்
சிறகுகளை எரித்த
நெருப்பின் வெளிச்சத்தில்
கூண்டுக்குள் இடம்தேடும்
மனப்பறவை.

---புதிய மாதவி

Thursday, December 10, 2009

வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு..

கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக்கவலைகளும்
கிடையாது
புது வீட்டில்..
ஆனாலும் என்ன
புது வீட்டின்
பெரிய ஜன்னல்களூடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை..

---- அகிலன்