Sunday, December 13, 2009

ஒருவன் கொல்லப்படும் போது...

ஒருவன் கொல்லப்படும் போது
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது

குருதி பெருகி வடிந்து
பச்சை பசும் புல் தரை
செவ்வரத்தம் பூக்கள் போலாகப் போகின்றது

மலக் குழிக்குள் பதுங்கியிருக்கும்
ஈக்கள்
இரட்டைச் சிறகு முளைத்துப் பறந்து
மொய்க்கப் போகின்றன

இன்னும்
மல்லிகை மணம் கசியும் காற்று
பிணநெடி சுமந்து வீசப் போகின்றது
அழும் குரல்கள் கணப் பொழுதில்
ஓய்ந்துவிடப் போகின்றன
இவை தவிர
ஒருவன் கொல்லப்படும் போது
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது
இன்னுமொருவன் கொல்லப்படுவான்
என்பதைத் தவிர.

---பறவை போல சிறகடிக்கும் கடல் தொகுப்பில் இருந்து ..அலறி

No comments:

Post a Comment