Sunday, December 13, 2009

என் வனம் என்னிடம்..

தலைவன்களும் பல்லக்கத்தூக்கிகளுமாய்
ஊர்வலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊரிலிருந்து
இவ்வனத்திற்குள் வந்து நாட்கள் பலவாகியிருந்தன

வனம் நிறையப்புற்களோடும் கொஞ்சம் மான்களோடும்
அழகாயிருந்தது.
தேன்சொரிந்தாலும் காய்கனிந்தாலும் வந்துபோக
பட்டாம்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும்
அங்கே சுதந்திரம் இருந்தது.

இயற்கையின்மொழி இதயமெங்கும்
கவிதைகளை நிறைத்துக்கொண்டிருந்தபொழுதில்
அவன் தயங்கித் தயங்கி வந்து நின்று
தானுமொரு வனம்விரும்பி என்றான்
வனம்விரும்பிகளின் ரட்சகன் என்றான்
மொழிக்காதலனுமென்றான்
நான் வனம் நிறைத்திருந்த கவிதைகளை
அவனுக்குச் சொல்லலானேன்
பூக்களில் தேன் சொரிந்திருந்தும்
அன்று பட்டாம்பூச்சிகள் வருகையை நிறுத்திக்கொண்டன

தன்பரப்பில் வாழும் உயிர்களுக்கான
வனச்சுனையின் பேதமற்ற நீரளிப்பை
நெக்குருகிச் சொல்லிக்கொண்டிருந்தபோது
தலையைச் சிலுப்பிக்கொண்டே
"இப்படித்தான் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்
அல்லது பேசிக்கொண்டிருப்பதே நம் பண்பாடு"
தன் அபிமான நடிகன்கூட
ஒருபடத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என்றான்
பறவைகள் அக்கணம்
வனத்திற்கெதிரான திசையில் பயணிக்கக் கண்டேன்

தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்
கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்
நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்
உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட
பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்
கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்
சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்
முகில்களோ, மான்களோ எதுவும்
தட்டுப்படாத வெறுமை சூழந்தது

அவனுடனான உரையாடலில்
என் சொற்கள் தீர்ந்துபோன சமயத்திலும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்
தான் இச்சமூகத்துக்கு
ஏதேனும் செய்தே தீருவேன் என்றான்
கலைரசிகர்கள்
வனம்வாழ்வது தகாதென்றான்
இலக்கியம், கலை, மொழிபரப்புதலில்
தானொரு தலைவனாவதற்கு
ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்
தன்பின்னே வந்தால் எதிர்காலம் சிறக்குமென்றும்
தன்னைச் சுமப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானவனென்றும்
இடைவெளிகளற்றுப் பேசிக்கொண்டேயிருந்தான்


மௌனத்தை மொழிபெயர்க்கத் தெரியாதவன்
பதிலுக்கு நச்சரித்தபோது நான்
நோய்க்கூறுகள் உருவானது இப்படித்தானென்றேன்
அவன் கோபம் கொப்பளிக்க என்னை
ஒரு சமூகத்துரோகியென முடிவுசொல்லி விடைபெற்றிருந்தான்
ஒரு நீள இரவு கடந்து
விழித்துக்கொள்கையில்
மழைபெய்திருந்தது
மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன
என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது

No comments:

Post a Comment