Sunday, December 13, 2009

தரமுடியாது உங்களால் எங்கள் ஆத்மாவை.

இந்நிழல் எமதல்ல!
இக் கூடாரங்கள் எமது குடில்கள் அல்ல!
சுற்றி உறுதியாய் கோட்டைப்போல் அமைந்த
மதில் பாதுகாப்பல்ல! பிளவு
காணவும், ஒன்று சேரக் கூடாதென்பதன்
அடையாளமாகயிருக்கும் பிளவு.

முள்வேலிகளையும்
கண்ணிகளையும்
கடந்தபோது யார் யாரைத் தொலைத்தோம்!
யார், யார் யார் யாரை இழந்தோம்!
என்றறியாது
உடல் சிதைந்து, கால் சிதைந்து
ஈனஸ்வரத்தில் துடித்திருந்த எமது மக்களைத்
தாண்டினோம்.

கால் இடறிய இடம் கடல்.

பொங்கிச் சீறும் அலைகளின் நடுவே
சிறுதோணியில் பனி இறங்கும் கடலில் நடுங்கிக்
கொண்டே பயணித்தோம்.
வாழ்தலின் கடைசிமுனையில் நின்றுகொண்டு
வந்து சேர்ந்தோம். இங்கு.

இங்கு தரப்பட்டது இரண்டு தட்டும், டம்ளர்களும்
தரவேண்டியது மேலான ஒன்று.
எங்கள் கிராமத்திலிருந்தது அது.
அதன் சத்தியத்தை நீங்கள் காணமுடியாது.

எமது குடில்
எம்மக்கள் பூத்து வளர்ந்த கோவில். அந்நள்ளிரவில்
ராட்சசர்களைப் போல் உருண்டு வந்த
பீரங்கிகள் எமது குடில்கள் மீது ஏறியிறங்கின.

'அம்மா பயமாயிருக்கு" என்று அலறிய மழலைகளை
கட்டியணைத்தபடி திசையறியாது ஓடிய
எம் மக்களோடு ஓடினோம்.

முரட்டு ஆடை அணிந்தவர்கள் இடைமறித்து எங்கள்
குமரிகளை எங்கே இழுத்துச் சென்றார்கள்.
சேறும் சகதியுமாக கிடந்த பாதையில்
எத்தனை குமரிகள் சின்னாபின்னமாக கிடந்தார்களே!
யாரின் உறவுகள் அவர்கள்

இதுதாமா எமது வாழ்வு?

கொழுந்திட்டு எரியும்போது கண்டோமே!
கிராமத்தின் அழுகையை.
தீ, வளர்த்த தீயில் எமது பயிர்கள், மரங்கள்
வெந்ததே!
எம்மையே இழந்தோமே!

உணர முடிகிறதா உங்களால்!
தரமுடியாது உங்களால் எங்கள்
ஆத்மாவை.

No comments:

Post a Comment