Sunday, December 13, 2009

வெற்றிடம்

இருள் சூழ்ந்த
கானகத்தின் மௌனத்தில்
நிராயுதபாணியாய் நின்று
கொண்டிருக்கிறது மனது
தனித்தீவில் தன்னந்தனியாய்
மாட்டிக் கொண்டவனின்
கைக்கடிகாரமும் உடைந்தது போல
தவிக்கிறது இயலாமை
எங்கிருந்தோ வந்து
என் இமையிரண்டையும்
பறித்துச் சென்று விட்டுத்
தூங்கச் சொல்கிறது
இதுகாரும் நிகழ்ந்த நிகழ்வுகள்
நிலவின் நகரலைக்
கணக்கெடுத்துக்கொண்டே
விண்மீன்களை எண்ணுவது போல
வினாடிக்கு வினாடி
குறையாத அனுபவங்களை
அசை போடுகிறது ஆழ்மனது
தூக்கத்திலிருந்து விழித்துக்
கொண்ட குழந்தை
தாயின் விரல்களைத்
தேடுவது போல
பக்கத்து இடத்தை
வெறித்துப் பார்க்கிறது
தேடித் தொலையும் மனது
விடியப் போகும் வானத்திலிருந்து
இமையிரண்டும் திருப்பி
அனுப்பப்பட்டு தூங்கத்
தயாராகும் விழிகளுக்கு
எப்படிப் புரிய வைப்பது
என் நண்பன் வருவதற்கு
இன்னும் ஒரு வாரம்
இருக்கிறதென்று.

No comments:

Post a Comment